பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 களிப்பிற்குப் பிறகு இப்படி ஒரு மாற்றம் வருமென்று அடிகளார் கனவிலும் கருதவில்லை. அதனாலேயே மனம் நொந்து குருநாதரை விளித்து எனை எற்றினுக்கு ஆண்டாய்” என்று வினவுகிறார். ‘எற்றினுக்கு ஆண்டாய்” என்று கேட்கும் குருநாதரிடமிருந்து விடை ஒன்றும் வாராமையால் 'காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் என்று பாடுகிறார். அப்படி ஒருவேளை தம் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு குருநாதர் இவருடைய உடலை அழிக்க முடிவுசெய்தால், அதற்கு முன்னர்ச் சிறு வேண்டுகோளை வைக்கின்றார். 'குருநாதரே, செத்திடப் பணியாய்' என்றும் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் என்றும் வேண்டிக் கொண்டேன். அப்படியே இவ்வுடலைக் கழிப்பதற்கு முன்னர் இரண்டு வேண்டுகோளை நிறைவேற்றி அருள்வாயாக. ஒன்று- இவ்வுடம்பு இருந்தாலும் போனாலும் உனைப் பிரிவுறா அருளைக் காட்ட (தருதல்) வேண்டும். இரண்டு- ஐயனே, என் வாழ்க்கையை மாற்றியமைத்த உன் திருவடிகளை இவ்வுடம்பு அழிவதற்கு முன்னர் மற்றொரு முறை தரிசிக்க விரும்புகிறேன் என்ற கருத்தை நின் கழலிணை காட்டி' என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அடிகளாரின் உள்ளத்தில் தோன்றிய அந்த அவலம் வளர்ந்துகொண்டே செல்கின்றது. குருநாதர் அருளையும் தரவில்லை; திருவடிக் காட்சியையும் தரவில்லை; செத்திடப் பணிக்கவும் இல்லை. இன்னது செய்வது என்று அறியாத நிலையில், நம்பிக்கை இழந்த நிலையில் முடிவாக வெளிப்படுவது 448ஆவது பாடலில் வரும் ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைப்பேன் ஆண்டநீ அருளிலை ஆனால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்' என்ற பகுதியாகும். 404ஆம் பாடலில் வரும் இறைவனைப் பற்றிய பல விளிகள் கருத்துடை விளிகளாக அமைந்துவிட்டன.