பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ‘எம்பெருமான்’ என்ற ஒரு சொல் எஞ்சுகிறது. இந்நிலையில் மனம் முழுதும் அன்பினால் நிறைந்திருப்பினும் தான்' என்ற நினைவு தணியவில்லை. அங்கே நானும் உள்ளேன்; ஏத்தப்படுபவனும் உளன்; ஏத்துதலாகிய செயலும் உளது. அதனையே பேர் ஆயிரம் பரவித் திரிந்து எம்பெருமான் என ஏத்த’ என்று பாடுகிறார் அடிகளார். இந்தச் செயல் நடைபெற நடைபெற அங்கே ஒரு புதுமை விளைகின்றது. நான், அவன், ஏத்தல் என்ற மூன்றும் இருந்த இடத்தில் மெள்ளமெள்ள நான் மறைகிறது. சற்று நேரத்தில் ஏத்தப்படுபவனும் மறைந்து விடுகிறான். ஏத்தல், தன் தன்மையை இழந்து அரற்றலாக மாறிவிடுகிறது. இந்த முதிர்ந்த வளர்ச்சியைத்தான் ‘எம்பெருமான் பெருமான் என்று வாயால் அரற்றி என்று பாடுகிறார். . நானை இழந்த நிலை இது என்று கூறினோம். ஆனால், ‘என்தன் வாயால் அரற்றி என்று பாடல் உளதே! ‘எந்தன்” என்ற சொல் எப்படிப் புகுந்தது? நான்’ இல்லாதவிடத்து எந்தனுக்கு இடமில்லை. இங்கு எந்தன்' என்ற சொல் நின்று வற்றும் (பொருள்கொள்ளப்படாத) சொல்லாகும். அச்சொல்லை விட்டுவிட்டுப் பாடலைப் படித்தாலும் எவ்விதத் தடங்கலுமின்றிப் பொருள் கிடைத்துவிடும். எம்பெருமான் பெருமான் என்று வாயால் அரற்றி என்பதே பொருள்கொள்ளப் போதுமானது. உலகியலிற்கூட ஒருவன் அரற்றத் தொடங்கினால், தொடக்கத்தில் நான் இருந்து, போகப்போக நான் மறைந்து விடுகிறது. அரற்றும்போது எழுவாய் பயனிலையோடு கூடிய சொற்றொடர்கள் வெளிவருவதில்லை. மனம் முதலியவை தமக்குரிய நினைக்கும் தொழிலை விட்டுவிட்டுச் செயலிழந்துவிடுக்கின்றன. அதனாலேயே அரற்றுபவர்கள் ஒரே சொல்லைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண் டிருப்பார்கள். இந்த ஆழமான மன நிலையைத்தான்