பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 357 'வெறுத்தேன் மனைவாழ்க்கை என்று பாடுவதை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். சுந்தரர் போன்ற பெருமக்களின் மண வாழ்க்கையில் மன நிறைவும், மன மகிழ்ச்சியும் நிறைந்திருந்ததை அறிய முடிகிறது. அப்படியிருந்தும் அவர் ஆழ்மனத்தின் உள்ளே, எங்கோ ஒரு மூலையில் இந்த இன்ப வாழ்க்கையின்மீது சற்றே சலிப்பு மறைந்து நின்றிருத்தல் வேண்டும். அடுத்து, அந்தச் சலிப்பு வளர்ந்து ஒரு நிலைக்கு வருகிறது. அந்த நிலையில் பொறி, புலன்கள் அடிப்படையில் இந்த உலகில் வாழும் வாழ்வை விட்டு இறைவனின் திருவடியில் ஒன்றவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. அதன் பயனாக வெறுத்தேன் மனைவாழ்க்கை என்று பாடினார். மேலே காட்டப்பெற்ற மேற்கோள்களை அவற்றைப் பாடிய பெருமக்களின் வாழ்க்கையோடு வைத்துப் பார்த்தால் பொறி, புலன்கள் எவ்வளவு வலுவானவை என்பதை அறியமுடிகின்றது. இவற்றையெல்லாம் மனத்துட் கொண்டு அடிகளாரின் வாழாப் பத்தை ஆழ்ந்து கற்கும்போது, இப்படி அவர் வருந்தக் காரணம், அருள் பெற்றபின்னும் அவ்வப் பொழுது ஒரோவழி தமோ குணச் சேட்டைகள் அவருள் தோன்றி மறைந்தன என்று நினைப்பதில் தவறில்லை. இத்தகைய சேட்டைகள் தோன்றாமல் திருப்பெருந்துறை அனுபவம் நீடித்திருந்தால் அடிகளார் வாழாப் பத்தைப் பாடியிருக்கப்போவதில்லை. அந்த அனுபவத்தை, அது தம்மைவிட்டுப் போன அடிப்படையை, தனியே இருந்து கொண்டு அமைதியாகச் சிந்திக்கும்பொழுது, சில எண்ண ஒட்டங்கள் வரிசையாக அவருள் தோன்றி மறைந்தன போலும். ஒன்றுக்கொன்று ஒரளவு தொடர்புடையதும், ஒன்றின் பயனாக ஒன்று விளைவதும், ஆகிய எண்ண ஓட்டங்கள் அவருள் தோன்றி மறைகின்றன.