பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 365 தம்முடைய விருப்பத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு, இதையாவது கொடு இதையாவது கொடு என்று வேண்டுகிறார் என முன்னுரையில் குறிப்பிட்டோம் அல்லவா? அந்த வேண்டுதலில் கடைசியாக நிற்பது 'அதெந்துவே என்று அருளவேண்டும் என்று கேட்கும் நிலையாகும். இப்பாடல்களில் ஒரு தனிச்சிறப்பைக் காணலாம். இறைவன் அண்டம் முழுதும் நிறைந்திருக்கின்ற நிலையையும் திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் குருநாதராய் வந்திருக்கும் நிலையையும் ஒரே பாடலில் வைத்துக்கூறும் அழகு இப்பதிகத்தில் காணப்பெறும் சிறப்பாகும். இப்பகுதியின் முதலாவது பாடலில் (458 அண்டம் முழுதும் நிறைந்திருக்கின்ற பேரொளிப் பிழம்பு எனத் தொடங்கி, அதிலிருந்து சிறு சுடருக்கு வந்து, அதிலிருந்தும் இறங்கிக் கையில் அகப்படும் விளக்காக அவனைக் கூறிவிட்டு, அதற்கு அடுத்த அடியில் அவன் யார் என்பதை விவரிக்கின்றார். சோதி என்பது வடிவற்றது; சுடர் என்பது தனக்கென்று ஒரு வடிவம் இல்லாத வடிவையுடையது; விளக்கு என்பது கட்புலனுக்கும் கைக்கும் அகப்படக் கூடியதாய் உள்ளது. இந்த மூன்றுமாக ஒருவனே உள்ளான் என்பது இறங்குமுக வரிசையாகும். ‘விளக்கு என்று கூறியவுடன் கேட்பவர் மனத்தில் அச்சம் கலந்த வியப்பிற்குப் பதிலாக ஒரு தோழமைத் தன்மை தோன்றிவிடும். விளக்கு என்பது நாம் அன்றாடம் கையாளும் பொருள் ஆதலால், இறைவனை விளக்கு என்றவுடன் ஒரு தோழமைத் தன்மை தோன்றிவிடும். அந்த எண்ணத்தை மாற்றப்போலும் மறுபடியும் அவனுடைய பெருமையை ஏறுமுகமாகச் சொல்லிக்கொண்டு செல்கிறார். மடந்தை பாதியே என்பதால் உருவமும் நமக்கு நெருக்கமும் மனத்திடைத் தோன்றுகிறது. இனி அதற்கு மேல் பல படிகள் சென்று பரனே என்றார். -