பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 சில பயன்கள் சித்திக்கும் என்று எதிர்பார்த்தார். அதனையே 'அல்லல் எல்லாம் அகல அதாவது அகல்வான் வேண்டி அல்லது அகல்வதற்காகக் குருநாதர் அடியாராகிய தம்மை ஆண்டார் என்று உறுதியாக நம்பினார். குருநாதர் ஆண்டது நேரில் கண்டு அனுபவித்த உண்மை; இப்பொழுது அல்லல் அகலாமல் இருப்பதும் உண்மை. என்ன நிகழ்ந்தாலும் குருநாதர் ஆண்டதில் குறை சொல்ல முடியாது. ஆண்டதால் ஏற்பட்ட பயனை உடல், மனம், உள்ளம் என்ற மூன்றாலும் அந்த நேரத்தில் அனுபவித்தார் ஆதலின் அதில் குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை. அப்படியானால் அல்லல் ஏன் அகல வில்லை? எல்லா அல்லலுக்கும் காரணமாக இருப்பது, இந்த உடலும் அதனைச் சேர்ந்த அந்தக்கரணம் முதலியவைகளும்தானே? ஆக, அல்லல் நீங்க வேண்டு மானால் இந்த உடல் சிதைய வேண்டும். உடலைச் சிதைத்துக்கொள்வதற்குத் தமக்கு உரிமையில்லை. இந்த நிலையில் குருநாதரையே பார்த்துச் சிதையாதது எத்துக்கு? என்று கேட்பது நியாயம்தானே! இவ்வாறு பொருள் கொள்ளாமல், அந்த அந்த அடிக்கு அப்படி அப்படியே பொருள் செய்துகொண்டு போனால் பாடலின் முழுப்பயனையும் அனுபவிக்க முடியாது போய்விடும். 498ஆம் பாடலின் முதலில் ஒரு விநோதமான வினாவை, கேட்கக் கூடாதவனிடத்துக் கேட்கிறார், இவ்வாறு கூறும்போது சிலருக்குச் சினம் தோன்றலாம். ஆனால், உண்மை அதுதான். இப்பொழுது அந்தத் தொடரை மறுபடியும் பார்க்கலாம். ஒன்றும் போதா நாயேனை, உய்யக்கொண்ட நின் கருணை, இன்றே இன்றிப் போய்த்தோதான்’ என்பதே அத்தொடராகும்.