பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 4:19 எப்படி ஒரே பாடலில் இடம் பெறுகின்றன. இதுவே அடிகளாரின் தனிச்சிறப்பாகும். அனுபவத்தின் எல்லைக்குச் சென்ற அவர், அந்த அனுபவத்தில் இருக்கும்போது நான், எனது, பகல், இரவு என்பவற்றை அறியவில்லை. உன்மத்தராக உள்ள ஒருத்தர், இவற்றை அறியேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒன்று, எதுவும் அறியாத நிலையில் இருத்தல் வேண்டும்; இன்றேல், அறிவின் துணைகொண்டு இவற்றை அறியும் நிலையில் இருத்தல் வேண்டும். இந்த அடிப்படை சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் நியாயமானதாகும். ஆனால், திருவாதவூரர் என்ற மனிதர், மணிவாசகராக மாற்றப்பட்டார். மிக நுண்மையான அவருடைய மன்த்திலும் உள்ளத்திலும் இறைவன் புகுந்திருக்கலாம். ஆனால், பஞ்ச பூதத்தின் சேர்க்கை ஆகிய இந்தப் பரு உடம்பில் அவன் எவ்வாறு புகுந்தான்? நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த உடம்பினுள் அவன் புகுந்தான் என்று கூறியுள்ளாரே, அது எவ்வாறு பொருந்தும்? பழைய அருளாளர்கள் பாடல்களில் இறைவன் அவர்கள் உள்ளத்தில் புகுந்து உறைவதாகப் பாடியுள்ளனர். 'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் (திருமுறை: 6:8:5), நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ (திருமுறை: 4:1:2) என்று நாவரசரும், நோயுளார் வாயுளான்' என்று காழிப்பிள்ளையாரும், மனத்துன்னை வைத்தாய் (திருமுறை: 7:1:1) என நம்பியாரூரரும் பாடியுள்ளமை நினைவில் கொள்ளத்தக்கது. ஆனால், இவர்கள் யாரும் அவர்கள் பூத உடம்பில் அவன் புகுந்தான் என்றோ, பூத உடம்பில் சில மாற்றங்களைத் தந்தான் என்றோ பாடவேயில்லை. இறையருளில் மூழ்கி இருக்கும்போது மனம் பெற்ற மகிழ்ச்சி, உள்ளம் பெற்ற ஆனந்தம், உடம்பு பெற்ற இன்பம்