பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இவர்களிடையே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இல்லை. தாங்கள் தாங்களே பெரியவர்கள் என்றும், தம்முடைய உபதேசம்தான் பின்பற்றப்படவேண்டும் என்றும் இவர்கள் கூறிவந்தார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதனையே அடிகளார் 'சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாகவே அரற்றி மலைந்தனர்' (திருவாச: 4.52,53) என்று பாடுகிறார். இத்தகைய குழப்பமான ஒரு நிலையில் சைவ சமயத்தவர் ஒன்றுகூடி, கூட்டுவழிபாடு செய்திருப்பர் என்று கூறுவதற்கில்லை. அப்படியே சில நேரங்களில் செய்திருப்பினும் அச்சமயத் துறவிகள்கூட ஒன்றாக இணைந்து மடங்கள் அமைத்துத் தங்கியிருந்தனர் என்று சொல்வதற்குப் போதிய ஆதாரமில்லை. காலை, மாலை நேரங்களில்மட்டும் திருக்கோயில் சென்று வழிபடுவது, ஏனைய நேரங்களில் தனித்தனியே இருந்து தியானம் செய்தல், நூல்களைப் படித்தல் என்ற முறையில்தான் அந்நாளைய துறவிகள் பொழுதைக் கழித்திருத்தல் வேண்டும். தனியே இருக்கும்போது சண்டிக் காளை போன்று சுற்றித்திரியும் மனத்தை அடக்கி ஆளுதல் அனைவருக்கும் இயல்வது ஒன்றன்று. இந்த அடிப் படையை மனத்துள் கொண்டு பார்த்தால், அடிகளார் 510 ஆம் பாடலின் இறுதி இரண்டு அடிகளுக்குத் தக்க முறையில் பொருள் செய்யமுடியும். பற்றுதற்கு உரிய பொருள் இறைவன் திருவடிகளே என்பதை உணர்ந்து, ஏனைய பற்றுக்களைத் துறந்து, திருவடிகளிலேயே கவனத்தைச் செலுத்தும் பெரு மக்களுக்கு, அடிகளார் செய்யும் உபதேசம், நான்காவது அடியில் பேசப்பெறுகிறது. 'கற்று ஆங்கு அவன் கழல் பேணினரொடும் கலந்தே கூடுமின் என்று கூறியதால் பற்றற்ற துறவிகளும்கூடத் தனித்தனியே நிற்பார்களாயின் மனம் அவர்களை எளிதில் ஏமாற்றிவிடும். எனவே, நன்கு கற்று இறைவன் கழல் பேணிடும் அடியார்களோடு