பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வேண்டும் என்ற இயல்பு, சாதாரண மனிதனுக்கும் அமைச்சருக்கும் பொதுவான இயல்பே ஆகும். இந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தவர் திருவாதவூரர். இந்த மனநிலையோடுதான் திருவாதவூரர் குருநாதரைச் சந்திக்கிறார். அருகில் சென்றபொழுதுதான் இந்தத் துறவி வழங்கும் செல்வம், ஏனைய செல்வங்களைப் போன்று நிலையில்லாத ஒன்றன்று என்பதை உணர்ந்தார். இந்த குருநாதர் வழங்கும் அருளாகிய செல்வம், ஏனைய செல்வங்களைப் போன்று உடனே அனுபவிக்கத் தக்கதாயும் இருந்தது. பிற செல்வங்கள் அனுபவிக்கும் பொழுது மகிழ்ச்சியைத் தருவதன்றி நிலையாகப் பிறிதொன்றையும் தருவதில்லை. ஆனால், இவர் வழங்கிய அருளாகிய செல்வம், அனுபவிக்கும்பொழுது மன மகிழ்ச்சியையும் தந்து, உள்ளத்தின் ஆழத்தில் அமைதியையும் தந்தது. பிற செல்வம் மன நிறைவைத் தருவதில்லை. ஆனால், இந்த அருளாகிய செல்வம், உள்ளத்தில் நிறைவையும் தந்தது. அம்மட்டோடு இல்லாமல், இப்பிறவிக்கு மருந்தாகவும் இருந்தமையின் அதனை அமுது என்கிறார் அடிகளார். குருநாதர் தந்த அருட்செல்வத்தின் சிறப்பு இதுவாகும். இத்தகைய ஒரு செல்வத்தைபெறுபவரின் தகுதி நோக்காமல்-குருநாதர் வழங்குகின்றார். கிடைக்காதது கிடைத்தால் அத்தனையையும் வாரிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. இத்தகைய மனநிலையில் பழகிவந்த அடிகளார் குருநாதர் வழங்கிய அருளார் அமுதத்தையும் வாரிக்கொண்டு விழுங்கத் தொடங்கினார். இறைவன் தந்த உடல் அமைப்பில், புறத்தே பொருள் எவ்வளவு நிறைந்திருந்தாலும். அதனை உள்ளே செலுத்துவதற்கு வாய் ஒன்றே வழியாக உள்ளது. வாயின் வழி சிறியது; ஆதலின், பொருள் மிகுதியாக இருப்பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்ணவேண்டும்.