பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அதிசயங்களைக் காட்டிய திருவடி நன விலும் கனவிலும் தமக்கு உறுதுணையாக உள்ளது என்ற நினைவும் அடிகளார் உள்ளத்தில் தோன்றுகிறது. அத்திருவடி இம்மை-மறுமை ஆகிய இரண்டிலும் தமக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை உறுதிசெய்து கொண்ட அடிகளார் ஒரு மாபெரும் வளர்ச்சியை அடைந்துவிடுகிறார். சாதாரண உலகியலில்கூட மிகவும் வேண்டிநின்று பெறமுடியாத ஒன்றைப் பெற்றவுடன் எனக்கிது போதும், இனி யார் தயவும் தேவையில்லை என்று சொல்கின்ற மரபு இன்றும் உண்டு. இந்த அடிப்படையில் உறுதுணையாகவுள்ள திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துக்கொண்ட பிறகு, அடிகளார் மனத்தில் மாபெரும் வளர்ச்சி ஏற்படுவது நியாயம்தானே? அந்த வளர்ச்சியின் வெளிப்பாடுதான் "உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்’ (558) என வரும் பாடல். உற்றார், ஊர், பேர், கற்றார், இனிக் கற்கவேண்டியவை அனைத்தையும் உதறி விட்டு, என்ன வேண்டுகிறார் அடிகளார்? குற்றாலத்தி லுள்ள இறைவனுடைய திருவடிகளை நினைந்து, ஈன்ற பசுப்போல் உருகுவது ஒன்றையே வேண்டி நிற்கின்றார். இந்த உருக்கம் உற்றாரை யான்வேண்டேன் என்ற பாடலின் முதலிரண்டு அடிகளில் கூறப்பெற்ற அனைத் திற்கும் ஈடாக நிற்கின்றதைக் காண்கின்றோம். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள முடியும். ஒருமனிதன் இறைப்பொருளை நாடி வாழத் தொடங்கினால் இறுதியாக அவனுக்குச் சித்திப்பது இந்த உருக்கமேயாகும். இறையன்பின் வெளிப்பாடாகத் தோன்றும் இந்த உருக்கம், வாழ்க்கையில் வேண்டப்படும் முடிந்த பொருளாகும்.