பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அதேபோன்று மனத்தில் தோன்றும் இயல்பான ஆசைகள் அளவோடு இருக்கும்போது வளர்ச்சிக்கு உதவும. அந்த ஆசைகள் பேராசையாகும்போது வாழ்வை அழிக்கும். இங்கு அடிகளார் கூறும் ஆசை மனத்தளவில் தோன்றும் இயல்பான ஆசையாகும். பிறவி, எந்தநிலையிலும் துன்பத்தையே தருதலின், அந்தத் துன்பத்தைப் போக்கும் ஒன்று இறைவன் திருவடிகளே என்பது தெளிவு. எனவே, அத்திருவடிகளைப் பெற ஆசைப்படுகிறேன் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானதே ஆகும். அளவான ஆற்று நீர் பயிர்களை வளர்க்கும் என்று கண்டோம். அடிகளார் கூறும் அளவுமீறாத ஆசை , அது தோன்றும் மனத்தை முதலில் ஒருமுகப்படுத்துகிறது. பின்னர், நெறிகெட்டுத் திரியும் பொறி, புலன்களைச் செம்மைப்படுத்தி, ஒருமுகமாக வளரச் செய்கிறது. கண்கள் அவனைக் காணவும், காதுகள் அவன் புகழைக் கேட்கவும், நா. அவன் புகழைப் பாடவும், உடல் அவன் திருவடிகளைப் பற்றிக்கொள்ளவும் ஆன ஒருமுகப்பட்ட வளர்ச்சியைப் பெற இந்த ஆசை உதவுகிறது. ஆசை என்பது மனத்தில் தோன்றும் ஒரு விளைவு ஆகும். மனம் என்ற ஒன்று இருக்கின்றவரையில், ஆசை இருந்தே தீரும். அதனை அறவே போக்கிவிடுதல் என்பது ஏறத்தாழ இயலாத காரியம். இம்முயற்சியில் ஒரு சிலர் வெற்றி பெற்றார்கள் என்பதை மறுத்தற்கில்லை. ஆனாலும், எஞ்சிய பலருள் சிலர் வாழ்க்கையின் அடித்தளத்தில் ஆசையை அறுக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதை, ஆராய்ந்து கண்டால், அறிய முடியும். பொறி, புலன்களையும் மனத்தையும் ஒருசேர அழித்துவிட முடியாது என்பதை நம் முன்னோர் என்றோ கண்டனர். அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்; அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை’ (திருமந்:2009) என்பது