பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'அல்லிக்கமலத்து அயனும் மாலும் அமரர்கோனும் அல்லாதவரும் சொல்லிப் பரவும் நாமத்தானை' என்றதால் சிவபெருமானைக் குறித்தவாறாயிற்று. இம்மூவரையும் அடுத்து ஏனையோரும்’ என்று கூறாமல், 'அல்லாதவர்' என்று கூறியதால் சிவபெருமானைப் பரம்பொருள் என்று ஏற்றுக்கொள்ளாத பிற தெய்வ வழிபாட்டுக்காரர்களைக் கூறினாராயிற்று. அவர்கள் தமக்குரிய தெய்வமாக ஒன்றை ஏற்றுக்கொண்டு அதற்குரிய பெயரைக் கூறி வழிபடுபவர்கள் அல்லவா? எந்தப் பெயரைக் கூறி வழிபட்டாலும் அப்பெயர்களுக்குரியவன் சிவபெருமானே என்பதைக் கூறவந்த அடிகளார். அல்லாதவரும் சொல்லிப் பரவும் நாமத்தானை' என்றார். பிற்காலத்து வந்த தாயுமானவப் பெருந்தகை வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை’ (தாயு கல்லாலின்-25 ) என்று பாடியதும் சைவ சாத்திரக்காரர்கள், "யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்று கூறியதும் இக்கருத்தை வலியுறுத்துவனவே யாகும். பாடலின் இறுதியில் 'அமுது' என்று கூறியபிறகு 'அமுதின் சுவை” என்று அடுத்துக் கூறுவது சற்று வினோதமானது. இந்நூலின் முற்பகுதியில் பல இடங்களில் இத்தொடரை அடிகளார் பயன்படுத்தியுள்ளார். அமுதிலிருந்து சுவையைப் பிரிக்க முடியாது. குணா குணிபாவம் என்று இதனைக் கூறுவர். அப்படிப் பிரிக்க முடியாத அமுதையும் சுவையையும் பிரித்தே அடிகளார் கூறுகிறார் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.