பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரைப் பத்து-95 அதனாலேயே அடியார்கள் நிலைக்கு வந்தவர்களைப் பார்த்து, விடுமின் வெகுளி என்கிறார் அடிகளார். வெகுளிக்கு அடுத்தபடியாக அடியார்கள் மனத்திடை ஒரோவழித் தோன்றுவது வேட்கை இந்த வேட்கை பொருள்களின்மேல் தோன்றும் மிகுபற்றாகும். சமதிருஷ்டி அடைந்தவர்களே அடியார்களாவர். அந்தச் சமதிருஷ்டிக்குப் பகையாக முன் நிற்பவை வெகுளியும் வேட்கையும். எனவே, இவற்றை அடியோடு ஒழித்துவிடுங்கள் என்பதைக் கூறவந்த அடிகளார் வெகுளி வேட்கை' இரண்டையும் மிகவே விடுமின் என்கிறார். அடுத்து உடம்போடு கூடிய உயிர்கட்கு இவை இயல்பாக அமைந்தவைதானே, உடம்போடு இருக்கின்றவரை இவை ஓரளவு இருக்கத்தானே செய்யும் என்பாரை நோக்கி, இவற்றை வைத்துக்கொண்டிருக்க, இது சரியான காலமன்று என்பதை, காலம் இனி இல்லை என்ற தொடரால் கூறுகிறார். இதனை அடுத்து வருகின்ற அடி சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். அடியார் கூட்டத்தைச் 'சாத்து என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். சாத்தோடு செல்ல ஒருப்படுமின் என்று ஏன் சொல்லவேண்டும்? பயணமோ கடுமையான பயணம்; உடலோடு உடன் பிறந்த வெகுளி முதலியவற்றை எல்லாம் உடனடியாக விடவேண்டும் என்று கூறிவிட்டார். சிவலோகத்தில் நுழைவதற்கு, எப்போது அவருடைய திருக்குறிப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நேரம், மிக மிக இக்கட்டானதும் புதிய பிரச்சினைகள் தோன்றக் கூடியதுமான நேரம். இந்த நிலையில், ஒத்த எண்ண அதிர்வுகளை (vibration) உடைய அடியார்களுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்பதைக் கூறவே பெருஞ் சாத்தோடு என்றார். உடம்போடு இருக்கின்றவரை மனித மனத்திற்குச் சில குறைகள் உண்டு.