பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவாசகம் சில சிந்தனைகள்-5 பதிகம் முழுவதிலும் 'கண்டேனே' என்று பாடுகிறாரே தவிர, வேறு என்ன நடந்தது என்று கூறவில்லை. இந்த ஐயத்திற்கு விடைகூறுவதுபோன்று குலாப் பத்து அமைந்துள்ளது. இதுவும் தில்லையிலேயே பாடப்பெற்றது ஆதலானும் ஒவ்வொரு பாடலும் 'குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே என்று முடிவதாலும், திருப் பெருந்துறையில் அடிகளாருக்கு நிகழ்ந்த பழைய அற்புதம் தில்லையிலும் நடைபெற்றது என்பதை அறியமுடிகின்றது. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கும் தில்லை நிகழ்ச்சிக்கும் இடையே ஒரு சிறு வேறுபாடு அமைந்திருத்தலைக் காணலாம். திருப்பெருந்துறைக்குச் சென்ற அடிகளார் திருப்பெருந்துறைக்குச் செல்லவேண்டுமென்ற எண்ணத்துடன் செல்லவில்லை. அவருடைய நோக்கம் தொண்டிக்குச் சென்று, குதிரைகளை வாங்கவேண்டும் என்பதேயாம். ஆனால், நடுவழியில் இவரை எதிர்பார்த்திருந்த குருநாதர், இவரைச் சிக்கெனப் பிடித்துவிட்டார். குருநாதரைக் கண்ட ஒரே விநாடியில் திருவாதவூரர் மணிவாசகராக மாறிவிட்டார். குருநாதரைக் &$fröᏈüᎢ வேண்டுமென்பது இவருடைய நோக்கமன்று, ஆதலால் அவரைக் கண்டதுகூட இவருடைய செயலன்று; மணிவாசகராக மாற்றப்பட்டதும் இவருடைய செயலன்று. எது எப்படியிருந்தாலும், குருநாதர் இவரைக் கண்டார்; ஒரே விநாடியில் இவரை ஆட்கொண்டு உளம்புகுந்தார். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுச் சில நாட்களோ மாதங்களோ ஒடிவிடுகின்றன. உத்தரகோசமங்கை முதல், ஊரூராகத் தேடிச் சென்ற அடிகளாருக்குக் குருநாதர் எங்கும் சிக்கவில்லை. அப்படித் திரிகின்றபோது குருநாதரின் எதிரே அமர்ந்திருந்த அடியார் கூட்டம் அடிகளாரின் மனத்தைவிட்டு அகலவேயில்லை.