பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருவாசகம் சில சிந்தனைகள்-5 சொல்லுக்குப் பல பொருள் உண்டேனும், கற்பு, அன்பு என்ற இரண்டு பொருள்களும் இங்கு மிகப் பொருத்தமாக அமையக்கூடியவை. கற்பு என்பது கல்வி, நெஞ்சுறுதி என்பவற்றின் கூட்டமாகும். அடியார்கள் ஏறும் குதிரையை கல்வி என்று கூறினால், கல்வியறிவு இவர்களை ஆட்கொள்ளாமல், அந்த அறிவுக்குத் தலைவர்களாக நின்று இவர்கள் தொழிற்படவேண்டும். அதாவது கல்வியாகிய குதிரையின்மேல் இவர்கள் ஏறவேண்டுமே தவிர, கல்விச்செருக்கு என்பது இவர்கள்மேல் ஏறிவிடக்கூடாது. மானம் என்ற சொல் அன்பு என்ற பொருளையும் கொண்டது என்று கண்டோமல்லவா? போருக்குச் செல்கின்றவர்கள் அன்பு என்ற குதிரையில் ஏறிச்சென்றால் எவ்வாறு போர்செய்யமுடியும் என்று ஐயுறுகின்றவர்களும் உண்டு. ஆனால், உண்மை வேறு. அன்பாகிய குதிரைமீது ஏறி, ஞானமாகிய வாளைப் பிடித்துக்கொண்டு செல்லும் வீரர்கள் எவ்விதப் போரும் செய்யாமல் அஞ்ஞானத்தை வெல்வர். வெல்லப்பட்ட அஞ்ஞானத்தின்மீது வெறுப்போ பகைமையோ கொள்ளாமல் இருக்கச்செய்வது இவர்கள் ஏறியுள்ள அன்பு என்ற குதிரை. இனி இருப்பது 'நாதப் பறை அறைமின்’ என்பதாகும். இங்குக் கூறப்பட்டது பர நாதமே ஆகும். அதன் ஒலி வடிவம் நமசிவாய என்பதாகும். ஆக, ஞானவாளை ஏந்தி, மான மாவில் ஏறிச் செல்பவர்களைச் சுற்றி, ஐந்தெழுத்தின் ஓசை வெகுவாகக் கேட்கிறது. ஞானவாளை ஏந்தியவர்களாயினும், மான மா ஏறியவர்களாயினும் தங்கள் குறிக்கோள் என்ன என்பதை அறிவின் துணைகொண்டு ஆய்ந்து, அதை மூளைப் பகுதியில் நிறுத்தவேண்டும். அதனையே உருவகமாக மதி (அறிவு) வெண்குடை கவிமின்' என்கிறார். வாள், குதிரை, பறை முதலியவை இருப்பினும் இந்தப் பரு உடல் தனித்துத்தானே இயங்குகிறது. குதிரைமேல்