பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்பா 0 113 உறையுள் இருக்கும் வேலை எடுத்து எதிரேயுள்ளவன் மார்பில் பாய்ச்சினான் என்றால், எதிரேயுள்ளவன் ஏதேனும் பிழைசெய்திருக்க வேண்டும் என்று நினைப்பது உலகியல்பு. திருப்பெருந்துறையில் இருந்த குருநாதர் ஒரே விநாடியில் தம் மார்பில் வேலைப் பாய்ச்சினார் என்கிறார் அடிகளார். அவர் வேலைப் பாய்ச்சுவதற்கு தாம் என்ன பிழை செய்தோம் என்று தமக்கே தெரியவில்லை என்கிறார். பழிப்பது போன்றுள்ள இந்த உருவகத்தின் உண்மைப்பொருள் வருமாறு: செய்த பிழை என்பது அவரையும் அறியாமல் அவர் ஈட்டிய மூவகை வினைகளாம். இந்த வினைகள் என்பால் சேராமல் இருக்கவேண்டுமாயின் குருநாதர் சேவடிகளைக் கைகளால் தொழுது இதனைப் போக்கிடவேண்டும் என்பதையும் அறியாமல் இருந்துவிட்டேன்’ என்கிறார். உய்தல் என்பது பிழைப்பது, வாழ்தல் என்ற பொருளையுடையது. சாதாரணமாக உலகிடை வாழவேண்டுமேயானால் உயிர்ப்பு இன்றியமையாததாகும். உயிர்ப்பு என்பது மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுதல் என்ற பொருளையுடையது. சேவடி தொழும் செயல் ஏதோ தம்மி னும் வேறாய்த் தனித்து நிற்காமல் உயிர்ப்புப்போலத் தம்பால் இயல்பாக அமைந்திருக்க வேண்டும். ஏதோ திருக்கோயில்களைக் கண்டபொழுது சேவடிகளைத் தொழுததாகவும் ஆனால், அப்படித் தொழும் பழக்கம் தம்முடைய மூச்சுக் காற்றுப்போல் இயல்பாக அமையவில்லை என்றும் வருந்துகிறார் அடிகளார். இதனையே சேவடியே கை தொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன்” என்கிறார். - அப்படியிருந்த அவரைப் பெருந்துறை நாயகன் என்ன செய்தான் தெரியுமா? உறைக்குள் (திரோதான சக்தி) இருந்த வேலை மெய்ஞ்ஞானத்தை எடுத்து அவர் மார்பில் பாய்ச்சினான் என்கிறார்.