பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. பண்டு ஆய நான்மறை (அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்) பண்டாய நான்மறை என்ற பகுதியிலுள்ள ஏழு பாடல்களும் அந்தாதித் தொடையாக அமைந்திருத்தலின் எஞ்சிய மூன்று பாடல்கள் காணாமற் போய்விட்டன என்று நினைப்பதில் தவறில்லை. போய்விட்ட பத்தாம் பாடலின் ஈற்றடி பண்டே என்று முடிந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பண்டாய என்று தொடங்குவது மண்டலித்தல் என்ற மரபுக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். அடிகளார் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் அவருடைய மனமாற்றம் ஏற்பட்ட சூழ்நிலையும், பெருந்துறையான் திருவிளையாடலும் இதற்கு முந்தைய பகுதியாகிய திருவெண்பா விலும், இந்தப் பகுதியிலும் பேசப்பெறுகின்றன. ஆனால், எந்த ஒரு கருத்தும் விரிவாகப் பேசப்பெறவில்லை. எந்த ஒரு நிகழ்ச்சியும்கூடத் தொடக்கம், நடுவு, இறுதியென்றில்லாமல், போகிற போக்கில் சில சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு, குறிக்கப்பெறுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது விட்டுவிட்டு வருகின்ற நினைவுகள் (random thoughts) இப்பாடல்களில் ஒரு வடிவு பெற்றனவா என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. பெரும்பாலும் அருள் அனுபவ நினைவுகள் உணர்ச்சியுடன் கலந்தே வெளிப்படும். திருவாசகத்தில் இதற்கு முன்னருள்ள பாடல்கள் இக்கூற்றுக்கு ஆதாரமாக உள்ளன. திருவெண்பாவின் முன்னுரையில் கூறியுள்ளபடி,