பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படை ஆட்சி (சீவ உபாதி ஒழிதல்) பொதுவாகவே திருவாசகத்தின் பிற்பகுதி எளிதில் பொருள் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் அமைந்துள்ளது என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இந்தக் கருத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது திருப்படையாட்சி என்னும் இப்பகுதியாகும். என்னைப் பொறுத்தவரை எத்துணை முறை படித்தும், எத்துணை முறை பிறரைப் படிக்கச்சொல்லிக் கேட்டும் ஒரு சிறிதும் பொருள் விளங்குமாறில்லை. ஒரு சில பெருமக்களுடைய உரைகளைப் பார்த்ததில் விளக்கம் கிடைக்காமல்போனதுமட்டும் அன்றி எனது குழப்பமே அதிகமாயிற்று. காரணம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் பொருள் கொண்டுள்ளனர். ஆகாதே’ என்ற சொல்லுக்குக்கூட ஒரே வகையாகப் பொருள்கொள்ளும் முறை காணப்படவில்லை. இச்சொல்லுக்கு ஆகும்’ என்றும், ஆகாமற் போய்விடுமோ? என்றும், ஆகாது' என்றும் பொருள்கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த எட்டுப் பாடல்களில் ஐம்பத்தாறு முறை வரும் ஆகாதே’ என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வது எளிதான காரியமாக இல்லை. முதலாவதாகத் தலைப்பையே எடுத்துக்கொள்ளலாம். 'படை என்ற சொல்லும், ஆட்சி என்ற சொல்லும் நன்கு அறியப்பட்டனவே ஆகும். பகையை அழிப்பதற்குப் பயன்படும் கருவிகளைப் படை என்று பொதுவாகக் கூறுவர். அப்படைகளை ஏந்திய காரணத்தால் அதனை ஏந்திய வீரர்களின் கூட்டத்தை ஆகுபெயரால் படை என்று கூறுவதும் உண்டு.