பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. அச்சோப் பதிகம் |அநுபவ வழி அறியாமை! அச்சோப் பதிகம் என்ற தலைப்பில் ஒன்பது பாடல்களே உள்ளன. அச்சோ என்பது வியப்பிடைச் சொல்லாக இருந்து, இப்பொழுது அதே பொருளில் 'அடேயப்பா என்ற வடிவுடன் வழங்குகிறது. பதிகம் என்பதால் பத்துப் பாடல்கள் இருந்திருக்க வேண்டும். வழக்கம்போல் ஏதோ ஒரு பாடல் காணாமல் போய்விட்டது. அது கடைசிப் பாடலாகத்தான் இருக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. முன்னைய பதிகங்களின் முறைவைப்பை மாற்றி அமைக்கலாம் என்றெல்லாம் சொல்லியுள்ளோம். ஆனால், எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி இறுதியாக இருக்கவேண்டியது அச்சோப் பதிகம் என்று நினைப்பதில் தவறில்லை. 'ஆர்பெறுவார் அச்சோவே' என்ற தொடருக்கு ‘என்னையன்றி யார் பெற்றார்கள்’ என்று பொருள் கூறியவர்கள் உண்டு. இது இப்பதிகத்தின் நுண்மையைச் சிந்திக்காமல் எழுதப்பெற்றதேயாகும். ஒவ்வொரு பாடலிலும் முன்னிரண்டு அடிகளில் இழி குணம் உடையவராகத் தம்மைச் சொல்லிக்கொண்டு, அடுத்த இரண்டு அடிகளில், இத்தகைய எனக்கும் அச்சன் (அப்பன்) அருளியவாறு ஆர் பெறுவார் என்று சொல்லும்போது, எந்தக் கடையனுக்கும் அவன் அருள் கிட்டும் என்பதையே வலியுறுத்துகிறார்.