பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருவாசகம் சில சிந்தனைகள்-5 உட்தலைப்பு இட்டவர்கள், அச்சோப் பதிகத்தின் போக்கினை அறியாமல், அநுபவவழி அறியாமை என்ற பொருத்தமற்ற தலைப்பினை இட்டுள்ளனர். இந்தப் பாடல்களில் எந்த அனுபவம்: யார் பெற்ற அனுபவம் பேசப்பெறுகிறது? ஒருவேளை, கடையனாக இருந்த தமக்கு மட்டும், இறையனுபவம் கிடைத்தது என்பதை அடிகளார் சுட்டுகிறார் என்று கொண்டால், ஒருவகையில் இதை அனுபவம் என்று கூறலாம். ஆனால், வழி அறியாமை என்று அடுத்து நிற்கும் இரண்டு சொற்கள் முழுவதுமாகக் குழப்பிவிடுகின்றன. 650. முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனைப் பத்தி நெறி அறிவித்துப் பழ வினைகள் பாறும்வண்ணம் சித்த மலம் அறுவித்துச் சிவம் ஆக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 1 'முத்தி நெறி என்பது என்ன என்றுகூடத் தெரிந்து கொள்ளாமல் தாம் மேற்கொண்ட வழியே சிறந்தது என்று நினைக்கும் மூர்க்கரொடு பழகினேன். அத்தகைய என்னைப் பிடித்து, பத்தி நெறி என்றால் என்ன என்பதை நேரடியாக அவனே அறிவித்தான். 'அவ்வாறு அவன் அறிவித்தது என்ன பயனைத் தந்தது என்றால், என்னுடைய பழவினைகள் ஒழிவதற்காகவே பத்தி நெறி அறிவித்தான். அறிவித்ததோடு விட்டானா? சித்தத்தையும், உயிரையும் பற்றிநின்ற மலங்கள் மூன்றையும் ஒருசேர அறுத்தெறிந்தான்’ என்கிறார். அடுத்து உள்ளது 'சிவம்ஆக்கி எனை ஆண்ட அத்தன்' என்பதாகும். இந்நாட்டின் பழைய சமயங்களாகிய சைவம், வைணவம் இரண்டும் இறைவனின் திருவடியில் ஆன்மாக்கள் சென்று இணைவதாகவே கூறுகின்றன. அப்படியிருக்க 'சிவம் ஆக்கி என்ற பிரயோகம் சற்றுப் புதுமையானது. சாயுச்சிய நிலையிற்கூட இந்த ஆன்மாக்கள்