பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை குலாப் பத்து அடிகளார் பெற்ற இறையனுபவ நிலையில் ஒரு பகுதியை மிக அழகாக இப்பகுதியின் முதலாவது பாடலின் (559) மூன்றாவது அடியில் குறிப்பிடுகின்றார். கூடும், உயிரும் குது.ாகலித்துக் கும்மாளம் அடித்தன என்பது உலகியல் நிலையில் இயலாதது ஒன்றாகும். உடல், இன்பத்தை நுகருகிறது என்றால் அது பொறி, புலன்கள் வாயிலாகவே நடைபெறும். எல்லாப் பொறி புலன்களும் அடுத்தடுத்து வெகு விரைவாக மாறிமாறி அனுபவிக்கமுடியுமே தவிர, ஒரே நேரத்தில் ஒரே காரணத்தால் இன்பமடைதல் ஏறத்தாழ இயலாத காரியம். காரணம் ஒன்றுண்டு, இப்பொறி, புலன்கள் மனத்தின் உதவியின்றி எந்த ஒன்றையும் செய்ய இயலாது. அந்த மனந்தானும் ஒரு பொறியோடு இயைந்து, ஈடுபட்டு இன்பம் அனுபவிக்கத் தொடங்கினால், ஏனைய நான்கு பொறிகளும் அந்த நேரத்தில் செயலிழந்து நிற்குமே தவிர, அந்த இன்பத்தில் பங்குகொள்ள முடியாது. கண்ணாகிய பொறி அனுபவிக்கும் இன்பம் வேறு; காதாகிய பொறி அனுபவிக்கும் இன்பம் வேறு. ஐந்து பொறிகளும் அனுபவிக்கும் இன்பம் வெவ்வேறாயினும் மனமாகிய ஒன்று இல்வழி எந்தப் பொறியும் எந்த இன்பத்தையும் தர முடியாது. மனம் ஒன்றேயாயினும் அந்த மனம் கண்ணோடு சேரும்பொழுது காட்சி இன்பத்தையும், காதோடு சேரும்போது கேட்கும் இன்பத்தையும், நாவோடு சேரும்போது சுவைக்கும் இன்பத்தையும் தனித்தனியே அனுபவிக்கின்றது.