பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இயல்பானதும் வரம்பிற்கு உட்பட்டதுமான விருப்பத்தைத் தமிழர் நசை என்று கூறுவதில்லை. வரம்பு மீறியதும் அளவு மீறியதுமான ஒன்றையே நசை என்று கூறினர். தோள் நசையால் என்று அடிகளார் குறிப்பிடும்பொழுது, நாள் முழுவதும் தோள்களையே நினைத்து ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் மனநிலையையே குறிப்பிடுகின்றார். நியாயமான விருப்பம் எல்லைகடந்த ஆசையாக மாறி, அந்தப் பேரெல்லையையும் கடந்து, நசையாக மாறும்போது தன்னைத் தான் கட்டிஆளும் ஆற்றலை மனிதன் இழந்துவிடுகிறான். அந்த இழப்பு ஏற்பட்டவுடன் எதனையும் செய்யத் தயாராகிவிடுகிறான். தான் செய்யப் போகின்ற செயல் குற்றமுடையது, தீமை பயக்கக்கூடியது, இம்மை மறுமைத் துன்பங்களைத் தரக்கூடியது என்று தெரிந்திருந்தும் அவைபற்றிக் கவலைப்படாமல் அவற்றையே செய்கிறான். இது நசையுடையார் வாழ்க்கை முறையாகும். இப்படி நசையுடையாராக இருந்தும்கூடத் திடீரென்று இவ்வாழ்க்கை முறையில் உவர்ப்பு ஏற்பட்டு, அருணகிரியாரைப்போல, ஒரே விநாடியில் மனம் மாறுபவர்களும் உண்டு. இப்படி மாறும் மனம் எங்கே தஞ்சமடைகிறது என்பதுதான் வினா. இந்த நசை மற்றொரு பொருளிடத்துக் கொண்ட நசையாக மாறினால் அது நற்பயனை விளைக்காது. உதாரணமாக- அதீதமான பெண்ணாசை உடையார் மனம்மாறி பொன்னாசையில் வீழ்ந்துவிடுவதும் உண்டு. இது தலைவலி யோகத் திருகுவலி வந்த கதையாகும். இவ்வாறில்லாமல் இந்த நசை மாறி இறைவன் திருவடிகளில் சரணடையத் தொடங்கினால், அம்மாற்றம் பழைய பிழைகள் அனைத்தையும் மன்னிக்கும். இதனையே அடிகளார் எனைத் தன தாள் முயங்குவித்தான் என்கிறார்.