பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_175 “எத்தனையும் செய்திடினும் என்ற தொடர் அளவுள் நிற்பதேயன்றி அளவுமீறிச் செயற்படுவதையே குறிக்கின்றது. உலகையும் மக்களையும் படைத்த இறைவன் மக்களுக்கு ஐந்து பொறி புலன்களைத் தந்துள்ளான். அவை அனுபவிப்பதற்குரிய தனு, கரண, புவன, போகங்களையும் படைத்துள்ளான். இவை இரண்டையும் படைத்தவன் இறைவன்தான். அப்படியிருக்க, 'பொறிபுலன்களைப் பயன்படுத்தி இன்பம் அனுபவியாதே' என்று கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை (திருமந்திரம்-2009) என்பது திருமூலர் வாக்கு. எனவே, பெண் இன்பம் உள்பட எந்த இன்பத்தையும் அளவோடு, வரம்பு மீறாமல் அனுபவிப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. வரம்பு, அளவு ஆகியவற்றை மீறுவதைத்தான் எத்தனையும் செய்திடினும் என்கிறார் அடிகளார். மூன்றாவது பாடலில் (56) உள்ள முதல் மூன்று அடிகளில் ஐந்து செயல்கள் நிகழ்ந்தனவாகப் பேசப்பெற்றுள்ளன. செய்யுளாகலின் இச்செயல்கள் முன்பின்னாகப் பேசப்பெற்றுள்ளன. இவற்றைப் பின்வரும் முறையில் வரிசைப்படுத்திக்கொள்ளலாம். துன்பங்களைதல் முதல் செயல்; துவந்துவங்களைத் தூய்மை செய்தல் இரண்டாவது செயல்; இருவினையை ஈடு அழித்தல் மூன்றாவது செயல்; என்பு உள்உருகுதல் நான்காவது செயல்; முன்பு உள்ளவற்றை முழுதும் அழித்தல் ஐந்தாவது செயல்: இவை முறையாக ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யப்பட வேண்டியவை ஆகும். உலகியல் முறையில், இன்ப துன்ப வேறுபாடுகளை மனத்தில் தாங்கினாலும் துன்பத்தில் துவள்கின்றவர்களை முன்னேற்ற முடியாது. ஆதலின், பெருந்துறை நாயகன் துன்பத்தை முதலிற் களைந்தான்.