பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_177 சஞ்சிதம், பிராரத்துவத்தின் ஒரு பகுதி என்பவற்றைப்பற்றி மேலே கூறிய நான்கு நிலைகளில் எதுவும் பேசப்படவில்லை. இருவினையை ஈடழித்து என்பது இந்தப் பிறப்பில் செய்யப்படுகின்ற ஆகாமியவினை பற்றியதே ஆகும். இந்த நான்குநிலை வளர்ச்சி ஏற்படாமல் இருந்தால், சஞ்சிதம் பிராரத்துவத்தின் ஒரு பகுதி என்பவை இருந்தபடியே இருந்து மேலும் எடுக்கப்போகும் பிறவிக்கு வித்தாய் அமைந்துவிடும். படிப்படியாய் வரவேண்டிய நான்கு நிலைகளையும் ஒரே விநாடியில் கடக்கச்செய்த குருநாதர் எஞ்சியிருக்கும் ஒன்றையும் மறக்கவில்லை. என்பு உள் உருகும் நிலை வந்தாலும்கூடப் பழவினையின் தொடர்ச்சியைப் போக்கா விடில் உருகும்நிலை மாறி, கட்டியாகும் நிலை தோன்றிவிடும். எனவே, குருநாதர் என்ன செய்தார் என்பதை மூன்றாவது அடியில் வரும் 'முன்புள்ளவற்றை முழுது அழியக் காரியம் செய்தான் என்றதால் விளக்கினார். அது என்ன காரியம்: மேலே உள்ள நான்கு நிலைகளையும் அடிகளார் கடக்க வேண்டி அருள் புரிந்த குருநாதர், புறத்தே இருந்தபடியே இவற்றைச் செய்துவிட்டார். ஆனால், ஐந்தாவது செயலைச் செய்வதற்குக், குருநாதர் ஒரு புது வழியை மேற்கொண்டார். திருவடி தீட்சை, நயன தீட்சை என்பவற்றின் மூலமே குருநாதர் இதனைச் செய்திருக்கலாமேனும் என்ன காரணத்தாலோ அந்த வழிகளை மேற்கொள்ளாமல் ஒரு புது வழியை மேற்கொண்டார். 'முன்புள்ளவற்றை’ என்றதால் இந்தப் பிறவியில் செய்யப்படாமல் பழைய பிறவிகளில் செய்யப்பெற்றனவாகிய சஞ்சித பிராரத்துவ வினைகளைக் குறித்தாராயிற்று. அவற்றை முழுவதும் அழிப்பான்வேண்டி உட்புகுந்தான். அவ்வாறு அவன் புகுந்ததை அடிகளார். நன்கு உணர்ந்திருந்தார். ஆதலின், அன்பு காரணமாக முன்புள்ளவற்றை முழுது அழிய உட்புகுந்த என்றார்.