பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178-திருவாசகம் சில சிந்தனைகள்-5 நான்காம் பாடலின் 562 முதலிரண்டு அடிகளில் மனித சமுதாயத்தை இரண்டு தொகுப்பினுள் அடக்கிவிடுகிறார் அடிகளார். முதலாவது தொகுப்பினர் தமக்கென்று ஒரு குறிக்கோள், வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய வழி, சத்துவ குண ஈடுபாடு ஆகிய எதுவுமின்றிக் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள். பெரும்பாலோர் இத்தொகுப்பினுள் அடங்குவர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற முறையில் அவ்வப்பொழுது கிடைக்கும் அற்ப சந்தோஷங்களுக்காக வாழ்க்கையைச் செலவிடுபவர்கள் இவர்கள். எவ்விதக் குறிக்கோளும் இல்லாமல் அந்தந்த விநாடிக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ளும் இவர்களைத்தான் 'குறியிலாக் குழாங்கள்’ என்கிறார் அடிகளார். ஏதேனும் ஒரு குறிக்கோளை வாழ்க்கையில் மேற்கொண்டால்தான் அதற்குரிய வழியை ஆராய்ந்து அவ்வழியில் செல்லுதலை மேற்கொள்ள முடியும். இந்த நெறி அந்தக் குறிக்கோளை அடையப் பெரிதும் உதவும். குறி, நெறி என்ற இரண்டும் இருந்தாலும், அவை எவ்வளவு உயர்ந்திருந்தாலும் அந்த நெறியிற் சென்று குறிக்கோளை அடைய வேண்டியவர் தாமத குணத்தராய் இருந்துவிட்டால் குறியும் நெறியும் பயனற்றுப் போகும். எனவே, குணமும் சிறப்புடையதாக அமைந்தாலன்றிக் குறியும் நெறியும் இருந்து பயனில்லை. ஆகவேதான், இந்த மூன்றையும் ஒன்றாக நிறுத்தி இவை மூன்றும் இல்லாத கூட்டத்தாரிடமிருந்து பிரிந்து நிற்கின்றனர் மற்றொரு சாரார். இவ்வாறு பிரிந்து நிற்பவர்களும் முதற் கூட்டத்தாரைப்போல மனிதர்களே ஆயினும், வடிவால் அவர்களை ஒப்பாரேனும், இவர்கள் முற்றிலும் தனியானவர்கள்.