பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அடியார்கள் என்று கூறப்பெற்றவர்கள் யார்? பிறவா நிலையை அடைந்தவர்கள் இவர்கள். எத்தனை பிறப்புக்களில் என்ன தவம் செய்தார்களோ, தெரியாது. இப்பொழுது இறைவன் திருவடியை அண்டி அதில் லயித்திருப்பவர்கள் இவர்கள். இந்த அடியார்களைக் காண்கின்ற நேரத்தில் இவர்களுடைய வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தவர் அமைச்சர். உலக பந்த பாசங்கள், அதிகாரம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றோடு வாழ்ந்திருந்த ஒருவர் இவற்றையெல்லாம் விட்டொழித்து அடியார்கள் கூட்டத்தில் எவ்வாறு அமரமுடிந்தது? இந்த அடியார் கூட்டத்திடை அமரக்கூடிய தகுதி அல்லது வாய்ப்பு ஏதேனும் தமக்கு இருந்ததா என்ற வினாவை அடிகளாரே எழுப்பிக்கொண்டார்போலும், தருக்க ரீதியாக இந்தத் திடீர் மாற்றத்திற்கு விடைகூற முடியாமையின் இந்நிகழ்ச்சியை அற்புதம் என்று பாடிவிட்டார். அடியரிற் கூட்டிய குருநாதர் அத்தோடு விடவில்லை. பிறவி நீங்கிய அடியார்மட்டுமே சதாகாலமும் கண்டு தரிசனம் பண்ணக் கூடிய அந்தத் திருவடிக்காட்சியைத் தமக்கும் தந்தார். மனித உடம்போடு அமைச்சர் பதவியில் சுற்றித்திரியும் தமக்கு எவ்வாறு, ஏன் அதனைத் தந்தார் என்ற வினாவை எழுப்பிக்கொண்டார் அடிகளார். அவருக்கு விடை ஒன்றும் கிடைக்கவில்லை. தருக்க ரீதியாக விடை காண முடியாதபோது இதனை அற்புதம் என்று கூறுகின்றார். ஒருவருக்கு ஒரு பொருள் கிடைக்கவேண்டுமானால் அதனைப் பெறக்கூடிய தகுதி அவர்மாட்டு ஓரளவாவது இருத்தல் வேண்டும். அதனைப் பெறுவதற்குரிய முயற்சியில் அவர் ஈடுபட்டிருத்தல் வேண்டும். சுருங்கக்கூறினால், தகுதிமட்டும் இருந்து முயற்சி இன்றேல் பயன் விளையாது.