பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருவாசகம் சில சிந்தனைகள்-5 மானுட வடிவில் இருந்த ஒருவரை ஒரே வினாடியில் சிவன் «Tøor அடிகளார் தேறுமாறு செய்தது அமர்ந்திருந்தவரின் சேவடியேயாகும். அந்த வினாடியிலேயே திருவாதவூரரின் வாழ்க்கைப் பயணம் முடிந்து மணிவாசகரின் பயணம் தொடங்கிவிட்டது. அந்தப் புதுப்பயணம் தொடங்கக் காரணமாய் இருந்த சேவடியை இறுதிவரை அடிகளார் மறந்தாரில்லை. நூற்றுக்கணக்கான பாடல்களில் சேவடிப் பெருமையை அடிகளார் பாடக் காரணமாக இருந்தது இந்த முதற்காட்சியின் விளைவேயாகும். குருநாதராய் அமர்ந்திருந்தவர் தாம் மனிதரல்லர் என்பதை அறிவித்ததுடன், தாம் இன்னார் என்பதையும் மெய்யனாய் வெளிப்பட்டு அமைச்சர் உணருமாறு செய்தது மூன்றாவது அற்புதம். அந்தணக் கோலம், துறவுக்கோலம் எதிரே அடியார் கூட்டம், இவற்றிடைத் தம் புறக்கண்களையும் கவனத்தையும், அறிவையும், உணர்வையும்கூட ஒருமுகமாகச் செலுத்தியிருந்தார் அடிகளார். அடியார் கூட்டத்திடை அமர்ந்திருந்த அடிகளாருக்கு, குருநாதர் மறைந்து உமையொருபாகனும், அவனும் மறைந்து தில்லைக் கூத்தனும் தொடர்ந்து காட்சியளித்தனரே! இத்தனை காட்சிகளிலும் ஈடுபட்டிருந்த அவருக்கு இறுதியாக நெஞ்சில் நிலைத்திருந்த காட்சி எது தெரியுமா? குருநாதரோ, உமையொரு பாகனோ கூத்தனோ அல்லர்; அதற்குப் பதிலாகக் குருநாதரின் திருவடிக்காட்சி மட்டுமே நிலைத்துவிட்டது. இதிலும் ஒரு வியப்பு உண்டு. திருவாதவூரர் என்ற அமைச்சருக்கு முதலில் கிடைத்த காட்சி எது? புவனியில் தீண்டிய சேவடிதானே? இறுதியாக எல்லாக் காட்சிகளும் முடிந்த பிறகு நெஞ்சில் நிலைபெற்றிருந்த காட்சி எது? அதுவும் திருவடிக்காட்சிதான் என்று சொல்லத் தேவையில்லை.