பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_189 இந்த அடிப்படையில்தான் அற்புதப் பத்தில் (57, 574, 57) ஆகிய மூன்று பாடல்கள் தவிர ஏனைய ஏழு பாடல்களிலும் திருவடிக்காட்சி இடம்பெறுகிறது. அதனை அற்புதம் என்றும் அடிகளார். பேசுகிறார். அழகும் பொலிவும் துறவுக்கோலமும் உடைய ஒருவரை, ஒருவர் கண்டுவிட்டால் மனத்தில் எது நிற்கும்? அந்தத் துறவியின் முகமண்டலம்தானே நிற்கும்! எதிரேயுள்ளவரை நன்றாக முழுவதுமாகக் கண்டார் அடிகளார். அப்படிக் காணுகின்ற பொழுதே எதிரேயுள்ளவர் தாம் யாரென்பதை அடிகளாருக்கு உணர்த்திவிட்டார் என்பதை மெய்யனாய் வெளிகாட்டி முன்நின்றதோர் அற்புதம் (569) என்று அடிகளாரே பாடுகின்றார். இதற்கு அடுத்த பாடலிலும் வேந்தனாய் வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் என்றும் அடிகளாரே பாடியுள்ளார். - முழுவதுமாகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டு எதிரே நின்ற ஒருவரை மெய்யன் என்றும் வேந்தன்' என்றும் அடிகளாரே கூறியுள்ளார். அத்தோடு அவர் வேந்தனாய் வெளியே என்முன் நின்றார் என்றும் இஃது ஒர் அற்புதம் என்றும் அடிகளாரே கூறியுள்ளார். இந்த அற்புதத்தின் முழுத்தன்மை என்ன? எதிரே நின்றவர் முழு வடிவுடன் அடிகளாரின் புறக்கண்கள் காணக்கூடிய வகையில் வெளிப்பட்டு நின்றதுதான் இந்த அற்புதம். இதைக் கூறும்போதுகூடத் தம்மைக் கவர்ந்ததை மிக நுணுக்கமாக அடிகளார் வெளிப்படுத்துகின்றார். மெய்யனாய் வெளி காட்டி முன் நின்றார் (569) என்றும், வேந்தனாய் வெளியே என்முன்நின்றார் (570) என்றும் கூறினால் பொருளென்ன? வெளிகாட்டி என்பதற்குப் பரவெளி தரிசனம் என்று பொருள் கொண்டாலும் எதிரேயுள்ளவர் தம் முழுவடிவையும் காட்டினார் என்பதுதானே பொருள்!