பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 11 கூட்டத்தாரும் உண்டு. இறைவன் முதலில் சொன்ன கூட்டத்தாரிடம் நெருங்குவதுமில்லை; இரண்டாவது கூட்டத்தாரிடமிருந்து பிரிந்துபோவதுமில்லை. அதனையே அடிகளார் 'குறியும் நெறியும் குணமும் இலாக் குழாங்கள்தமைப் பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனை' என்று குறிப்பிடுகின்றார். அடுத்துள்ளது 'செறியும் கருத்தில் உருத்து' என்பதாகும். உருத்து என்பது வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளைத் தரும். செறிகின்ற கருத்தில் வெளிப் பட்டுத் தோன்றுகிறான் என்றால், அதன் பொருளென்ன? எண்ணத்தையும் தாண்டி அப்பால் மிக நுண்மையாக இருக்கின்ற இயல்புடையது கருத்து. ஆனால், மனத்தைப் போலவே இந்தக் கருத்துக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எந்த ஒன்றிலும் ஒரு விநாடிகூட நிலைபெறாமல் குரங்குபோல் தாவித் திரியும் இயல்புடையது மனம். அதனை ஒட்டியிருக்கின்ற கருத்தும் இதே குணத்தைப் பெற்றுள்ளது. சிதறிச் செல்லும் இயல்புடைய இந்தக் 'கருத்து ஒருமுகப்பட்டுச் செறிந்து தொழிற்படுமேயானால், மிகப் பெரிய செயல்களையும் சாதிக்கவல்லது. தாவிச் செல்லும் இக்கருத்தை ஒருமுகப்படுத்தினால், அந்த ஒருமித்த நிலையில், இறைவன் வடிவுகொண்டு (உருத்து) தோன்றுவான். - இதுவரை தாவிக்கொண்டிருந்த கருத்து தாவுதலை நிறுத்திச் செறியத் தொடங்கியது. அந்தச் செறிவு காரணமாக அதனுள் உருப் பெற்றுத் தோன்றுகிறான் இறைவன். அது எப்படித் தெரியும்? கருத்தே நுண்மையானது. அதில் தோன்றும் இறைவன் அதைவிட நுண்மையானவன். நுண்மையில் தோன்றும் நுண்மையாம் இறைவன், கருத்தில் உருப்பெற்றான் என்பதைக் கண், காது, முதலிய பொறிகளால் அறியவோ சுவைக்கவோ முடியாது.