பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196--திருவாசகம் சில சிந்தனைகள் 5 இது கைநழுவிப்போகாமல் இருந்திருந்தால், அடிகளாரின் வாழ்க்கையில் பேரின்பம் இடைவிடாது நிலைபெற்றிருந்திருக்கும்; அவர் அதில் தோய்ந்து துளையமாடியிருப்பார். அவ்வாறு நடைபெற்றிருந்தால் அடிகளார். அதனால் பயன் பெற்றிருப்பாரே தவிர, உலகத்தார்க்கு எவ்விதப் பயனும் விளைந்திராது. அவர் மூலம் திருவாசகம் என்னும் பரா அமுதைத் தோற்றுவிக்க வேண்டித் தில்லைக்கூத்தனே இந்த அனுபவத்தை அடிக்கடி அவரை விட்டுக் கைநழுவிப் போகுமாறு செய்தான். இதுவரை உள்ள பாடல்களைக் கொண்டு மேலே கூறியமுறையில் பொருள் கூறி வந்துள்ளோம். ஆனால், இப்பொழுது அடிகளார் கூறும் உவமை இந்த எண்ண ஒட்டத்தை ஒரளவு தடைசெய்வதாக உள்ளது. ‘சர்க்கரைப் பண்டத்தை உண்க' என்று கையில் குச்சி எடுத்துக்கொண்டு அடித்து மிரட்டவேண்டிய தேவை என்ன? வேப்பங்காயை யாரையாவது உண்ணச் செய்ய வேண்டுமானால், மிரட்டியும் அடித்தும் உண்ணச் செய்வார்கள். ஆனால், சர்க்கரைப் பண்டத்திற்கு இந்த முறை தேவையில்லை. அடிகளாரோ சர்க்கரைப் பண்டமாகிய இறையனுபவத்தைத் தாம் அனுபவிக்குமாறு அடித்தடித்துப் புகட்டினார் குருநாதர் என்றல்லவா கூறுகிறார். அப்படியானால் சர்க்கரைப் பண்டமாகிய இறையனுபவத்தைப் பெற்றுவிட்ட பிறகு அதனுள் மூழ்கியிருப்பதற்குப் பதிலாக அதனைவிட்டு வெளியே வந்து உலகியல் நினைவில் ஒரிருமுறை அடிகளார் சுழன்றிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் அவரைப் பிடித்து இழுத்து இறையனுபவம் என்ற சர்க்கரைப் பண்டத்தை மறுபடியும் மறுபடியும் அடிகளார் உண்ணுமாறு தில்லைக்கூத்தன் செய்தான் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியுள்ளது.