பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_197 குருநாதர் அருளைப்பெற்று இறையனுபவத்தில் மூழ்கியிருந்த அடிகளார், ஓரிரு சமயங்களில் அந்த நிலையிலிருந்து சிறிது வ்ெளிப்பட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம், வெளிப்பட்ட நேரங்கள் மிகுந்துவிடாமல், தில்லைக்கூத்தன் அவரை இழுத்துப்பிடித்து மறுபடியும் மறுபடியும் இறையனுபவத்தில் மூழ்கச் செய்திருக்க வேண்டும். இதனையே அடித்தடித்து அக்காரம் தீற்றி என்ற வாய்பாட்டால் குறிப்பிடுகின்றார். இங்குக் கூறப்பெற்றபடி சிந்திக்கத் தொடங்கினால் இற்றைநாள் வாழ்கின்ற நம்போன்றவர்களுக்கும் ஒரு பிடிமானம் கிடைப்பதைக் காணலாம். மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட ஒருவர்கூட, ஒரு சில நேரங்களில் அதனை இழக்க நேர்ந்தால், கவலைப்படத் தேவையில்லை; திருவருளிடத்து வலுவான நம்பிக்கை இருக்குமேயானால் அத்திருவருள் இவர்களைத் தறிகெட்டுப் போக விட்டுவிடாது. பிடித்து இழுத்து மறுபடியும் அக்காரம் தீற்றும் என்ற நம்பிக்கையைத் தருவதே இப்பாடலின் உயிர்நாடியாகும். நாத தரிசனம், சோதி தரிசனம் என்ற இரண்டும் முறையே ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைப்பவையாம். ஆன்ம யாத்திரையில் முன்னேறிச் செல்லும் அடியவர்கட்கு முதலில் கிடைப்பது நாத தரிசனம். பொதுவாக நாதம் என்று கூறியவுடன் நம்முடைய காதுகளால் கேட்கப்படும் ஒலியையே மனத்தில் கொள்கிறோம். இவ்வுலகத்தில் பொருள்களின் அசைவால் உண்டாக்கப்படும் அதிர்வுகளே ஒலி, ஓசை என்ற இரண்டையும் தருகின்றன. ஆனால் இதிற்கூடப் பல வேறுபாடுகள் உண்டு. நம்முடைய காதுகள் கேட்கக்கூடிய ஒலியும், நாம் கேட்கமுடியாத- ஆனால், எலிகளும் நாய்களும் கேட்கக்கூடிய அதிக அதிர்வுகள் கொண்ட ஒலியும்