பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206-இ-திருவாசகம்-சில சிந்தனைகள் எம்பிரான் என்பது ஆண்டானைக் குறிக்கும் சொல் என்றால், அது நியாயமானதே. ஒரே ஒர் ஆண்டான்தான் உண்டு; அவனுக்குப் பல அடிமைகள் இருக்கலாம். அப்படியிருக்க எம்பிரான் ஆவாரே என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்? இதில் ஒரு துணுக்கம் அமைந்துள்ளது. பூத உடலுடன் சுற்றித்திரியும் சில அடியவர்களை அடிகளார் காண்கின்றார். திருவாதவூரராக இருக்கின்றவரையில் இவர்களையெல்லாம் சிவனடியார்கள் என்றே அமைச்சர் சாதாரணமாகக் கருதியிருந்தார். திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாருக்கு இரண்டு ஆற்றல்கள் கிடைத்தன என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அவற்றுள் ஒன்று, எதிரே இருப்பவர்களை ஊடுருவிக் கண்டு, அவர்கள் எத்தகையவர்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலாகும். சுற்றித் திரியும் சிவனடியார்களில் ஒரு சிலர் ஆதிப்பிரமத்தை (589) அறிந்தவர்கள். அது மட்டுமா? வலை வீசுகின்ற ஒருவனை இன்னான் என (591) அறிந்தவர்கள்; ஏடர்களை ஆண்டுகொண்ட இயல்பு (592) அறிந்தவர்கள்; பால்கொடுத்த கிடப்பை (594 அறிந்தவர்கள்; பேதம் கெடுத்து அருள்செய்பெருமை (595) அறிந்தவர்கள், கேதம் கெடுத்து ஆண்ட கிடப்பு (597) அறிந்தவர்கள் என்றெல்லாம் கூறுமுகத்தான் அந்த ஒரு சிலர் எத்தகையவர் என்பதை அடிகளார் விளக்கிக் காட்டுகிறார். வலை வீசியவன், தாய்ப்பன்றி யானவன், ஏடர்க்கு அருள் செய்தவன், பேதம் கெடுத்தவன் என்ற பல கோலங்களைக் கொண்டவன், வெவ்வேறு வடிவில் நின்று, வெவ்வேறு உருவைத் தாங்கி, வெவ்வேறு காலங்களில் இவற்றைச் செய்தான் எனினும் இத்தனையையும் செய்தவன் பெருந்துறையான் ஒருவனே என்பதை அறிந்து உணரும் ஆற்றல் உடையவர்கள் அந்த ஒரு சிலர் ஆவர்.