பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208-திருவாசகம் சில சிந்தனைகள் 5 பரம்பொருள் விலங்காகவும் வடிவெடுத்து வருகின்றது என்றும் கூறினர். இந்த அடிப்படையில்தான் திருவாதவூரருக்கு உபதேசம் செய்த குருநாதர்வடிவம் முதற்கொண்டு பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த பன்றி வடிவம்வரை, வந்தவன் ஒருவனே என்று கூறினர். உயிர்கட்குக் கருணைபுரியப் பல்வேறு வடிவங்களை ஏற்றுப் பரம்பொருள் வருகின்றது என்பதுவரையில் சைவம், வைணவம் என்ற இரண்டும் ஒத்துச் செல்கின்றன. அப்படி வருகின்ற பொருள் வேண்டுமிடத்து வேண்டுருக் கொண்டு வருகின்றது என்றனர் சைவர். மீனில் தொடங்கிப் பல அவதாரங்கள் எடுத்ததாகக் கூறினர் வைணவர். மானிட வடிவு தாங்கி அப்பொருள் வருவதைக் குறிக்கும்போதுமட்டும் மானிடத் தாய் தந்தையர்க்குப் பிறந்ததாகக் கூறினர். அடிகளாரைப் பொறுத்தவரை அம் முழுமுதற் பொருள் குருநாதர் வடிவு தாங்கித் தம்மை ஆட்கொண்டது. ஆதலின், மானிட வடிவு தாங்கி உயிர்களுக்கு அருள்செய்ததாக வரும் அத்தனை கதைகளையும் மனத்தில் வாங்கிக்கொண்டு தம் பாடல்களில் அவற்றுக்கு இடம்தருகிறார். குருவாக வந்தவனும், பன்றியை விரட்டிச் செல்லும் வேடனாக வந்தவனும், மீன்வலை வீசிய வலைஞனாக வந்தவனும், பன்றிக்குட்டிகளின் பசிபோக்கத் தாய்ப் பன்றியாக வந்தவனும் ஒருவனே ஆதலால் இப்பதிகத்தில் இந்நிகழ்ச்சிகட்கு இடம்தந்து பாடுகிறார். குருநாதராக வந்தது, குதிரைச்சேவகனாக வந்தது, மண் சுமக்கும் கூலியாளாய் வந்தது ஆகிய நிகழ்ச்சிகள் அடிகளார் கண்காண நடைபெற்றவை. ஏனையவை செவி வழிக்கதைகள். கீர்த்தித் திருவகவலிலும் பிற பாடல்களிலும் இக்கதை நிகழ்ச்சிகள் பெரிதாக இடம்பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சிதான் இப்பதிகத்தில் வரும் கதை நிகழ்ச்சிகள்.