பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_21 இன்றி நின்று எய்த்தலைந்தேன்’ (120 வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்' (48) என்பன போன்ற தொடர்களில் வரும் சொற்கள் அடிகளாரின் எண்ண ஓட்டத்தைமட்டும் வெளிப்படுத்தும் சொற்களாக அமையாமல், அவர் உள்ளத்தில் முகிழ்த்து எழும் இறையன்பின் பெருக்கத்தை, ஆழத்தை வெளியிடும் சொற்களாக அமைந்துள்ளதைக் காண்கின்றோம். உதாரணத்திற்காகச் சில தொடர்களை மேலே காட்டியுள்ளோமே தவிர, திருவாசகம் முழுவதுமே ஆழ்ந்த உள்ளத்து உணர்வை, இறையனுபவத்தைச் சொற்களின் மூலம் வெளிப்படுத்தும் ஒப்பற்ற பாடல்களின் தொகுதியேயாகும். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். சொல்லுக்கு இரு வகை ஆற்றலுண்டு. ஒன்று பொருளைக் குறிப்பதோடு நின்றுவிடுவது; மற்றொன்று உணர்ச்சியையும் உணர்வையும் தாங்கிவரும் வாகனமாக அமைவது. திருவாசகத்தைப் பொறுத்தமட்டில் திருச்சாழல், திருத்தசாங்கம் என்பன போன்ற ஒரு சில பாடல்கள் உணர்வுக்கு இடமின்றி, சொல்லின் முதற் பணியை நிறைவேற்றும் பாடல்களாக அமைந்துள்ளன. மிகப் பெரும்பாலான ஏனைய பகுதிகள் சொல்லை மூழ்கடித்துப் பொங்கிவரும் உணர்வை வெளிப்படுத்தும் இயல்புடையவை. இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு பார்த்தால் எண்ணப் பதிகம் என்ற தலைப்புள் காணப்பெறும் ஆறு பாடல்களும் மேலே சொன்ன இருவகைகளுள் எந்த வகையைச் சேர்ந்தன என்பதைச் சிந்திக்கவேண்டியுள்ளது. எத்தனை முறை படித்தாலும் ஏனைய திருவாசகப் பாடல்களோடு இந்த ஆறு பாடல்களும் ஒட்டுவதாகத் தெரியவில்லை. ஆனால், பாடல்கள் அடிகளார் தம் பிழைக்கு இரங்கி வருந்துவதை வரிசையாகக் கூறிச்செல்கின்றன. ஆறு பாடல்களில் தம்முடைய