பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_25 அருள்புரியவேண்டும் என்றெல்லாம் பாடுகையில் தம்மைத் தவிர வேறு யாரையும் அடிகளார் நினைந்து பாடினார் என்று சொல்வதற்கில்லை. நாயினும் கடையனாகிய யான் அழுங்குகின்றேன், அலமருகின்றேன், துயரக்கடலில் ஆழ்கின்றேன், அப்படிப்பட்ட என்னை ஆண்டுகொள்ளும் முறையில் கயிலை புகுநெறி இது காண்போதராய் என்று அருளவேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டுள்ளார். இத்தனை பாடல்களிலும் தம்மை நினைந்து, தம் குறைகளை எண்ணி, அவற்றை மன்னித்து இறைவன் ஆட்கொள்ளவேண்டும் என்று பாடியுள்ளாரே தவிர, பிறரைக் கூவி அழைப்பதாகவோ சிவபுரம் செல்ல வாருங்கள் என்று அழைப்பதாகவோ எந்தப் பாடலும் கூறவில்லை. இந்த நிலைக்கு முற்றிலும் மாறாக யாத்திரைப் பத்து அமைந்துள்ளது. இப்பதிகத்திற்கு முன்னர் அமைந்துள்ள எண்ணப் பதிகத்திலும் பிறர்பற்றிய பேச்சில்லை. என் பிறப்பற வேண்டும்’ என்றுதான் எண்ணப் பதிகம் தொடங்குகிறது. அப்படியிருக்க, யாத்திரைப் பத்தில் பருவுடம்போடு வாழ்கின்ற அடியார்களை எல்லாம் வருக என்று கூவித் தன்மைப்பன்மையில் பேசுகிறார். சிறியோமை. உள்ளம் கலந்து உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் என்று அவர்களை அழைத்ததற்கான காரணத்தையும், அவர்களுக்குள்ள தகுதியையும் எடுத்துக்கூறுகிறார் அடிகளார். இப்பொழுது தம்பால் வந்துகூடிய அவர்களை நோக்கி, காலம் வந்தது காண் பொய்விட்டு உடையான் கழல் புகப்போவோம்’ என்று முடிக்கின்றார். ஒரு சேனைத்தலைவன், தன்பால் உள்ள சேனைகளை இனி மேற்கொள்ளப்போகும் போருக்குத் தேவையான முறையில் தயார்செய்கிறான். குறிப்பிட்ட போரைச் செய்ய