பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுணு , 227 ஒன்றுதான். அந்த மனம் குரங்குபோல் தாவும் இயல்புடையதாதலில் அதில் புயங்கன் தாளை வைக்கவேண்டும் என்கிறார். இவ்வாறு கூறியதால் மனம் என்பது ஏதோ ஒரு பருப்பொருள் என்றும், தாள் என்பது ஒரு வடிவுடைய பருப்பொருள் என்றும் நினைத்து விடக்கூடாது. மனம் என்பது வடிவில்லாத நுண்பொருள். புயங்கன்தாள் என்பதும் வடிவுகடந்த நுண்பொருள். மனம் என்ற துண்பொருளில், தாள் என்ற மற்றோர் நுண்பொருளை வைத்திட்டு’ என்று அடிகளார். பேசுவது கவனிக்கவேண்டிய ஒன்றாகும். ஒரு பருப்பொருளில் மற்றொரு பருப்பொருளை வைக்கலாம். ஆனால், ஒரு நுண்பொருளில் மற்றொரு நுண்பொருளை எப்படி வைக்கமுடியும்? மாபெரும் அறிஞராகிய அடிகளார் வைத்திட்டு என்ற சொல்லையும் அதன் பொருளையும் அறிந்துதானே பயன்படுத்தியுள்ளார்? அப்படியானால் அவர் சொல்வதன் கருத்து என்ன என்பதைச் சிந்திக்கத் தொடங்கினால், உண்மை விளங்கிவிடும். "வைத்தல்” என்பது 'தல்’ விகுதி பெற்ற தொழிற்பெயராகும். இந்தத் தொழில் அல்லது வினை நடைபெறவேண்டுமேயானால் இதனைச் செய்வதற்குரிய வினைமுதல் அல்லது கர்த்தா வேண்டும். ஒரு பருப்பொருளில் மற்றொரு பருப்பொருளை வைப்பதற்கு எந்தக் கர்த்தாவாலும் முடியும், அடியில் உள்ள பொருளும் அதனுள் வைக்கப்படும் பொருளும் ஒன்றுக்கொன்று இணையாத வடிவுடையனவாக இருப்பின் கர்த்தா என்ன செய்கிறான்? வைக்கப்படும் பொருளின் வடிவத்தை சேர்த்தோ, குறைத்தோ, மாற்றியோ ஒரு வழிசெய்து இந்தப் பொருள் அந்தப் பொருளில் நுழைந்து செல்லுமாறு செய்துவிடுகிறான். அல்லவா? கர்த்தாவின் அறிவு வளர்ச்சி, உறுதி என்பவற்றிற்கு ஏற்ப ஒன்றினுள் ஒன்றை வைத்தல் எளிதாக நடைபெறுகிறது. -