பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருவாசகம் சில சிந்தனைகள்-5 வைத்தல் என்ற சொல்லுக்கு உள்ள இந்த ஆழமான பொருளை மனத்துள் வாங்கிக்கொண்டால் புயங்கன் தாளை புந்தி (புத்தி) வைத்திட்டு என்பதன் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியும். இங்கு ஒரு வேறுபாடு: யானை முதல் எறும்பு ஈறாய எல்லா உயிர்களிடத்தும் இணைந்தும் வெளிப்பட்டும் நிற்கும் இயல்புடையது புயங்கன் தாள். எதற்குள் வேண்டுமானாலும், அதற்குள் செல்லக்கூடிய இயல்பு அந்தத் தாளுக்கு உண்டு. அடியார்களுடைய புந்திக்குள் செல்வதில் தாளுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினையெல்லாம் நம்முடைய புந்தியில்தான். பலருடைய புந்தி அடிப்பாகமில்லாத ஒட்டையான பாத்திரம் போன்றது. மேலும் பலருடைய புந்தி விநாடிக்கு விநாடி மாறிக்கொண்டேயிருக்கிறது. அடிப் பாகம் இல்லாமலும், வடிவு மாறிக்கொண்டும் இருக்கின்ற பாத்திரத்தைப் போன்ற புந்தியில், தாளை எப்படி வைப்பது தாளை உடையவன் புந்தியுள் தாளை நுழைக்க எப்பொழுதும் தயாராக உள்ளான். புந்தியை உடையவர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? முதலில் புந்திக்கு ஒரு அடிப்பாகம் இட்டு உள்ளே நுழைந்த பொருள் வெளியே போய்விடாமல் இருக்கச் செய்யவேண்டும். அடுத்த படியாக விநாடிக்கு விநாடி மாறிவரும் அதன் வடிவைச் செப்பஞ்செய்து ஒரே வடிவுடன் இருக்குமாறு செய்யவேண்டும். இவ்வாறு செய்துவிட்டால் உள்ளே சென்ற திருவடி அங்கேயே தங்கிவிடும். இந்த முழுப்பணியையும் செய்யவேண்டியது புந்தியைப் பெற்றுள்ள நம்முடைய பணியே தவிர, இச்செயலில் திருவடியின் பணி ஒன்றுமில்லை. இத்தனை கருத்துக்களையும் உள்ளடக்கியே 'தாளே புந்தி வைத்திட்டு’ என்கிறார். "தாளே” என்பதன் ஏகாரம் இந்தத் திருவடிகளைத் தவிர வேறு எதுவும் புந்தியின் உள்ளே நுழைய இடம்தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை அறிவிக்கின்றது. -