பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_231 விடைகூறுவதுபோல, புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கு, இனி நாம் செல்வோமே என்று கூறி முடிக்கின்றார். இரண்டாட்டமாக உள்ள மனநிலைக்கு ஒரு விநோதமான சமாதானம் தோன்றுவதுண்டு. தாம் எங்கே போகிறார் என்பதை அடிகளார் கூறிவிட்டமையின் 'இன்று அவர் போகட்டும், போகவேண்டிய இடத்தைத் தெரிந்து கொண்டோம் ஆதலால் இன்று ஒய்வெடுத்துக்கொண்டு நாளை அல்லது நாளை மறுநாள் போனால் என்ன, குடியா முழுகிவிடும், என்று நினைக்கின்ற அந்த முழுச்சோம்பேறிகட்கு இறுதியாக ஓர் எச்சரிக்கைச் செய்கிறார் அடிகளார். இப்பொழுது புறப்படாமல் நாளைத் தள்ளிக்கொண்டு இருந்துவிட்டு, பின்னர் நீங்கள் புறப்பட்டுச்சென்றால், பெருமான் பெறுதற்கு அரியனாகிவிடுவான். நீங்கள் நினைத்தது நடவாதபொழுது அங்கே நின்று கவலைப்பட்டுப் பயனில்லை என்ற கடுமையான எச்சரிக்கையை, பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற்கரியன் பெருமானே’ என்று கூறி முடிக்கின்றார். 'இறைவன் தருகின்ற பேரானந்தத்தை இடைவிடாது உண்டு சுவைக்கின்றவர்களே! இப்பொழுது சிவபுரத்துக் கதவுகள் திறந்துள்ளன. அது எப்பொழுது மூடும் என்று தெரியாது, ஆகையால், திறந்திருக்கும்பொழுதே நுழைந்துகொள்ளுங்கள். இந்தக் கதவுத் தடையைத் தவிர வேறு தடையில்லை; ஆதலால் இதனுள் புகுந்துவிட்ட நமக்கு என்ன கிடைக்கப்போகின்றதென்பதை இதோ சொல்கிறேன். திருமாலும் அறியாத திருப்பாதங்கள் நமக்கு எளிதாகக் கிட்டிவிடும்’ என்கிறார். முதலடியில் கூறப்பெற்றது, அதாவது பேரானந்தத்தை உண்டு சுவைக்கின்ற நிலை இந்த உலகத்தில் இந்த உடம்போடு இருந்துகொண்டு புயங்கன் ஆள்வான் பொன்னடியைப் புந்தியில் இருக்குமாறு செய்து