பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_233. திருவருளுக்கு ஆளாகாமல் இவ்வுலகிடை வாழ்வே பெரிதென்று நினைந்து இருந்தால் மயக்கம்தான் உங்களுக்கு மிஞ்சும் (மருள்வீர்). இப்படி நீங்கள் மயக்கமடைந்தால் உங்களை யார் மதிக்கப்போகிறார்கள்? புத்தி கலங்கிச் செய்வதறியாது மயங்குகின்றவர்களே! இதனால் நீங்கள் பெறப்போவது, உலகிடை வாழ்வு. மகிழ்ச்சி தருகின்றது என்றுதானே இவ்வாழ்வைத் தொடங்கினர்கள்? அதுமட்டுமல்ல, உங்களுடைய அறிவு, செல்வம், பதவி என்பவற்றைக் கொண்டு உங்களை எல்லோரும் மதித்துப் போற்றுகிறார்கள் என்று நினைத்தீர்களே, இவை அனைத்தும் நிலையில்லாமல் போனவுடன் உங்களை யார் மதிக்கப்போகின்றார்கள்? பிறர் காட்டும் மதிப்பே பெரிதென்று இறுமாந்திருந்த உங்கட்கு அந்த மதிப்புப் போனவுடன் அறிவு கலங்கி மயக்கந்தான் எஞ்சும். இந்த அறியாமையிலிருந்து நீங்கள் தெளிவு பெறவேண்டுமேயானால் இதனைச் செய்யவேண்டும். எதனை? புகழ்தல், புரள்தல், தொழுதல் ஆகியவற்றைச் செய்துகொண்டிருக்கும் உண்மை அடியார்களைக் கண்டு மனம் தெளிந்து நீங்களும் இதனைச் செய்யுங்கள். இறைவனால் படைக்கப்பட்ட நீங்களே, கடல்போல் விரிந்துள்ள அவனருளுக்குப் பாத்திரமாகாவிட்டால், ஐயோ பாவம்! வேறு யார் இதனைப் பெறப் போகிறார்கள்? - இப்பதிகத்தின் ஐந்து முதல் பத்துவரை உள்ள பாடல்கள், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று உலகிடை வாழும் சாதாரண மக்களையும் தட்டி எழுப்பி அவர்கள் அடையவேண்டிய குறிக்கோள் என்ன என்பதை விளக்கி ‘உலகிடை வாழ்ந்ததுபோதும், உடனே புறப்படுங்கள்’ என்று எதிர்நின்று கூறி அவர்களையும் அழைத்துச் செல்ல அடிகளார் கூறும் சொற்களாகும்.