பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை © 235 ஆகியவற்றைக் கடந்துதான் சிவபுரம் ஆகிய குறிக்கோளை அடைய முடியும். தற்காலத்தார் இதனை வாழ்க்கை முழுதுமே போராட்டம் என்று கூறுவர். உலகியற் பொருளை அடையவேண்டிச் செய்யப்படும் கடுமையான உழைப்பையும் அதனைப் பெறுதலுக்குச் செய்யும் போராட்டத்தையும் இது குறிக்கும். ஆன்ம முன்னேற்றத்திலும், அஞ்ஞானம், அல்லல் என்ற இரண்டும் உண்டு. கண்ணப்பர் போன்ற ஒருசிலர் இந்த அஞ்ஞானம், அல்லல் என்பவற்றைச் சிந்திக்காமலேயே ஆறு நாளில் சிவபுரம் அடைந்தார்கள். இவர்கள் புறநடையே அன்றிப் பொது இலக்கணம் ஆகமாட்டார்கள். மிகப் பெரும்பாலானவர்கள் இந்தப் பொது இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். ஆதலின், ஆன்ம முன்னேற்றம் அடைந்து சிவபுரம் செல்ல அவர்கள் விழைவார்களாயின் என்ன செய்யவேண்டும் என்பதைத் திருப்படையெழுச்சியின் இரண்டு பாடல்களில் விளக்கமாகக் கூறுகிறார் அடிகளார். பக்தியில் ஈடுபட்டு நான், எனது என்ற அகங்கார மமகாரங்களை ஒரே விநாடியில் துறந்தவர்கள், அன்பே வடிவாய் ஆனவர்கள், இறைவன் திருவடிகளை உள்ளத்திருத்தி எனை நான் என்பது அறியேன் பகல் இரவாவதும் அறியேன்” (508) என்ற மனநிலையிலுள்ள பக்தர்கள் ஆகியோர்பற்றி இந்த இரண்டு பாடல்கள் பேசவில்லை. தன்னலத்தோடு வாழ்ந்தாலும் ஒரு குறிக்கோளோடு வாழ்ந்து, ஆன்மிக வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கும் சாதகர்களுக்காகக் கூறப்பட்டவையே இவ்விரு பாடல்களுமாகும்.