பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236-திருவாசகம் சில சிந்தனைகள் 5 திருவெண்பா மானிட உடம்பெடுத்த உயிர்கள் அனைத்திற்கும் வினை என்ற ஒன்று தவறாமல் அவ்வுயிரைப் பற்றிநிற்கும். வினைக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அது இருப்பதை அறிந்துகொள்வதே கடினம்; அதைவிடக் கடினம் அதனைப் போக்க வேண்டும் என்ற நினைவு தோன்றுவது; அதைவிடக் கடினம் அந்த நினைவைச் செயலாக்கி வினையைப் போக்க முற்படுவது. பல சமயங்களில் இந்த முயற்சியில் வெகுதூரம் சென்றவர்களைக்கூட வினை குறுக்கிட்டுப் பரம்பதப் படத்திலுள்ள பாம்புபோலப் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவிட்டுவிடும். விசுவாமித்திரர் பன்னூறு ஆண்டுகள் தவம் செய்தும் மேனகையைக் கண்ட ஒரு விநாடியில் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடுகிறார். எனவே, அடிகள் இதனை வெய்ய வினை என்கிறார். தவம் செய்து வினைகளைப் போக்க முயல்பவர்களும் உண்டு. இவ்வழியில் செல்பவர்களுக்குப் பல இடையூறுகள் ஏற்படும். அவர்களுடைய பொறி, புலன்கள், சுற்றுச்சூழல்கள் என்பவற்றைத் துணையாகக் கொண்டு அந்தப் பழவினை இவர்களைக் கீழே தள்ளிவிட முயலும், இவ்வாறெல்லாம் நிகழாமல் இருக்கவேண்டுமானால் அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. இறைவன் திருவருள் என்ற தீயில் இட்டு இவ்வினைகளைப் பொசுக்கினால் ஒழிய, அவை மீண்டும் மீண்டும் தலையெடுப்பதைத் தவிர்க்க முடியாது. இந்த துணுக்கத்தைத்தான் அடிகளார், வெய்ய வினை இரண்டும் வெந்து அகலத் திருவார் பெருந்துறையான் தேன் உந்து செந்தீயை (617) மனத்தால் மருவவேண்டும் என்கிறார். பெருந்துறையானைச் செந்தி என்று கூறியதால் அது வினையைச் சுட்டெரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால்,