பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_245 ஏறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் (625) என்று பாடுகின்றார். பெருந்துறையில் இருந்த பெருமான் நெஞ்சத்து வந்திருந்தான். எப்படி இருந்தான்? பிறவியைப் போக்கும் மருந்து உருவாய் (626 வந்து இருந்தான். பிறவியைப் பிணி என்றே பலரும் கூறுவர். எங்கோ இருந்துகொண்டு இந்த மருத்துவன் தன் அருளைச் செலுத்துவதன்மூலம் பிணியைப் போக்காமல், பிணியாளனின் படுக்கையிலேயே மருந்துவடிவாக வந்து இருந்துவிட்டான். மருந்து வேறு மருத்துவன் வேறு என்று இல்லாமல் மருத்துவனே மருந்தான விந்தை தம்முடைய நெஞ்சில் நடைபெற்றுவிட்டது என்று கூறிய அடிகளார், இப்பொழுது அந்த நெஞ்சைப் பார்த்து, நீ செய்வது நியாயமா என்று கேட்கின்றார். ‘ஏ நெஞ்சே அவன் யார் தெரியுமா? எங்கோ இருக்கவேண்டிய அவன் உன்பால் மருந்து வடிவாக வந்து தங்கிப் பிறவியையும் போக்கத் தயாராகவுள்ளான். நீ அங்கு இங்கு ஒடிவிடாமல், வந்து தங்கியுள்ள அவனுடைய இணை அடிகளையே சிந்தித்து உனக்கு வேண்டியவற்றையெல்லாம் இரந்து கேட்டாயாக! எல்லாம் தரும் காண்’ என்ற கூறுவதன்மூலம் ஒரு நுணுக்கமான கருத்தைத் தெரிவிக்கின்றார். எங்கோ இருக்கின்ற அவனை இங்கு உள்ள நெஞ்சு நினைந்து சிந்தித்து தொழுது வழிபட்டு, இன்னது வேண்டும் என்று கேட்பதுதான் மரபு. ஆனால், இங்கு என்ன நிகழ்ந்தது? அவனே இங்கு வந்துவிட்டான். நெஞ்சின் பக்கத்திலேயே மருந்துவடிவாக இருக்கின்றான். பக்கத்தில் வந்துவிட்டதால் அவன் அருமைப்பாடறியாத இந்த முட்டாள் நெஞ்சம் இங்குமங்கும் அலைகிறது. அச்செயலை விட்டுவிட்டு வேண்டுமானவற்றை இரந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார்.