பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250-திருவாசகம் சில சிந்தனைகள்-5 என்றும் அந்தக் குதிரைச் சாத்தின் தலைவன் என்றும் நினைத்தார்களே தவிர வேறொன்றுமில்லை. ஆனால், இவர்களிடையே மணிவாசகராக மாறிய முன்னாள் அமைச்சர் திருவாதவூரர் இப்பொழுது அரசனின் அண்மையில் நிற்கின்றார். என்ன அதிசயம்! அரசனுக்கும் மக்களுக்கும் தென்படாத காட்சி அடிகளாருக்குத் தென்படுகிறது; இந்தக் குதிரைச் சேவகன் பெருந்துறை வள்ளல் என்பதை உடனே புரிந்துகொண்டார். அந்த வள்ளல் அடிகளாரைக் குறிப்பாகப் பார்த்தானா? இல்லை. அடிகளார்தான் அவனைக் குறிப்பாகப் பார்த்தார். என்ன அதிசயம்! தம்முள் இருந்து தம் உயிரைப் பற்றிநின்ற மும்மலங்கள் பொலபொல என்று உதிர்வதை உணர்கின்றார். அதுமட்டுமா? தேனருவி உள்ளத்தில் குடகுபு என்று பாய்வதையும் உணர்கின்றார். இந்தச் செயல்கள் நிகழவேண்டுமானால் எதிரே உள்ள குதிரைச் சேவகன் பெருந்துறை நாயகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்கின்றார். அதனையே உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும்தேன் வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த வள்ளல், மருவும் பெருந்துறை (629) என்று பாடுகிறார். இதுபோன்ற நிகழ்ச்சி உலகிடை நடைபெறுவதுண்டு என்பதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். வனத்திடை நூற்றுக்கணக்கான தோழிகளுடன் தலைவி நிற்கின்றாள். எவனோ ஒரு குதிரைவீரன் அவ்வழியே வந்து, செல்லவேண்டிய வழி எது என்பதை நின்று, கேட்டுத் தெரிந்துகொண்டு அவன் போக்கில் போய்விட்டான். அவன் யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. மாலைப்பொழுதில் தோழிமார்களுடன் வீடு திரும்பினாள் தலைவி வந்து நின்று வழிகேட்டவனைப்பற்றி யாரும் நினைக்கவில்லை. நன்றாகத் தூங்குகின்றார்கள். தலைவி ஒருத்திக்குமட்டும் தூக்கம் வரவில்லையாம். இதனையே பின்வரும் பாடலால் தலைவி பேசுகின்றாள்: