பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252_திருவாசகம் சில சிந்தனைகள் 5 மேற்குக்கரை வழியாகத் தெற்கு நோக்கி இடம் பெயரலாயிற்று. தமிழகத்திலும் சங்க காலத்திற்கு முன்னரே இதன் செல்வாக்குப் பரவிற்று. இடம்பெறும் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி, ராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி போன்றவர்கள் இந்த யாகங்களில் பெரிதும் ஈடுபட்டனர் என்பதைப் புறநானூறு மூலம் அறிகிறோம். அக்காலத்தில் தமிழகத்தில் பரவிய சமண சமயம் இந்தக் கொலை வேள்வியை எதிர்த்துத் தன் கொள்கைகளைப் பரப்பிற்று. இதன் பயனாக யாகங்களின் எண்ணிக்கை சுருங்கிற்று. இது ஒருபுறமிருக்க சைவர்கள், சமணர்கள், வைணவர்கள் ஆகிய அனைவரும் தமிழர்கள் ஆதலால் இவர்களிடையே ஒற்றுமை நிலவிற்று. அவரவர் தத்தம் மதங்களைப் பின்பற்றியதால் பூசலுக்கு இடமில்லாமல் இருந்தது. இந்த ஒருமைப்பாட்டிற்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆபத்து வரலாயிற்று. எருமை நாடு என்று கூறப்பெற்ற மைசூர்ப் பிராந்தியத்திலிருந்து ஒரு கொலைக் கும்பல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுவாக்கில் தமிழகத்தில் நுழைந்தது. இவர்கள் களப்பிரர் என்று கூறப்பெற்றனர். தமிழர் அல்லாத இந்தக் கொள்ளைக் கூட்டத்தார் ஜீவகாருணியத்தை உயிர்நாடியாகக் கொண்ட சமணர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டது வியப்பேயாகும். மைசூரிலிருந்து சத்தியமங்கலம் வழியாகத் தமிழகத்தில் புகுந்த இக்கூட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. ஒரு கூட்டம் நேரே தெற்குநோக்கிச் சென்று பாண்டி நாட்டைப் பிடித்தது. மற்றொரு கூட்டம் நேர் கிழக்கில் சென்று பல்லவ நாட்டைப் பிடித்தது. ஏறத்தாழ மூன்றரை நூற்றாண்டுகள் இவர்கள் செல்வாக்கு, பாண்டிநாட்டிலும் பல்லவ நாட்டிலும் கொடிகட்டிப் பறந்தது.