பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22-9-திருவாசகம் சில சிந்தனைகள்-5 எதிர்மறை முகத்தால் தம்மேல் ஏறட்டுக்கொண்டு பாடியருளுகின்றார். தாம் கடையனாய் இருப்பதற்குக் காரணத்தைக் கூறுகிறார். 'கல் நேர் அனைய மனம்’ என்றதால் கல்லை ஒத்த, ஒரு சிறிதும் உருகாத மனம் தம்பால் இருத்தலின் தாம் கடையனாக ஆகிவிட்டதாகச் சொல்கின்றார். அப்படிக் கல்போன்ற மனத்தைப் பெற்றவர்கள் என்ன ஆகின்றார்கள்? அவலக்கடலில் வீழ்கின்றார்கள் என்பதே அடிகளாரின் விடையாகும். வியனுலகம் கடந்து பூங்கழல்கள் அடையவேண்டுமானால் ஒன்றைப் பெறவேண்டும்; ஒன்றைத் தாண்ட வேண்டும். கல்நேர் அனைய மனத்தைத் தவிர்த்து, உருகும் மனத்தைப் பெறவேண்டும்; அவலக் கடலைத் தாண்டவேண்டும். உருகும் மனத்தைப் பெறுவது மானிடப் பிறவி ஒன்றுக்கே உரியதாகும். திருப்பெருந்துறையில் காணப்பெற்ற அடியார்கள் கூட்டத்தோடும் குருநாதரோடும் செல்லமுடியாமைக்குக் காரணம் இந்தச் செடிசேர் உடலம்தான் என்று பலமுறை பாடியுள்ளார். ஆனால், அக்கருத்தை மாற்றித் தாம் இங்கு தங்கிவிட்டதற்குக் காரணம் தம்முடைய தகுதியின்மையும், பக்குவம் இன்மையுமே என்பதை என்னால் அறியாப் பதம் தந்தாய் (644) என்ற பாடலில் விளக்குகின்றார். தாம் அறிந்துகொள்ள முடியாத பதத்தைத் திருவடி மூலம் குருநாதர் தந்தார். கொடுத்த குருநாதர் அரைகுறையாகக் கொடுக்கவில்லை. முழுமையாகத் திருவடிப் பேற்றைத் தந்தார். ஆதலின் உன்னால் ஒன்றும் குறைவில்லை என்றார். அப்படியானால் இடர்ப்பாடு எங்கே நேர்ந்தது? அது அறியமுடியாத பதம் என்பதையும், அது தமக்குக் கிட்டியுள்ளது என்பதையும் நன்கு தெரிந்து கொள்ளாமையால் அவற்றை இழந்தார் என்பதை விளக்கிட யான் அது அறியாதே கெட்டேன்’ என்றார்.