பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278-திருவாசகம் சில சிந்தனைகள் 5 அச்சோப் பதிகம் இன்று காணப்பெறும் எல்லாத் திருவாசகப் பதிப்புகளிலும் அச்சோப் பதிகம்தான் கடைசியாகவுள்ளது. ஆழ்ந்து சிந்தித்தால் இப்பதிகம் இறுதியாக வைக்கப்பெற்றது நியாயமே என்பது தெரியவரும். திடீரென்று இருதயக் கோளாறு, விபத்து போன்றவற்றால் உயிர்விடுகின்றவரைத் தவிர, ஏனையோர் அனைவரும் மெள்ள மெள்ளத்தான் உயிர் நீப்பர். இவ்வாறு மெள்ள மெள்ள இறப்பவர்களை அருகிலிருந்து பார்த்தால் சில உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். பேசும் சக்தியை இழக்காதவர்கள் முணுமுணு என்று ஏதோ பேசிக் கொண்டேயிருப்பர். கோமா (coma) போன்ற மயக்கத்திலிருப்பவர்கள் பேசும் சக்தி இன்மையால் அவர்களுடைய முகத்தில் பல்வேறு மாறுதல்கள் தோன்றித் தோன்றி மறைவதைக் காணமுடியும். இவ்வாறு நடை பெறுவதற்கு ஒரு காரணம் உண்டென்று நம் முன்னோர் கூறினர். இறக்கப்போகும் தறுவாயில் உள்ளவர்கள் அவரவர் களுடைய வாழ்வு முழுவதையும் சில மணித்துளிகளில் படம்போலக் காண்பர் என்றும் அக்காட்சியையே வாய்விட்டு முணுமுணுப்பர் என்றும் கூறுவர். இந்த முணுமுணுக்கும் சக்தியை இழந்துவிட்டவர்கள்கூடத் தம் வாழ்க்கைப் படக்காட்சியை மனத்தளவில் காண்கின்றனர். உறக்கத்தில் வரும் கனவுபோல் இவர்கள் பழைய வாழ்வைக் காண்கின்றார்கள் ஆதலின் அந்தக் காட்சிக்கு ஏற்ப முகத்தில் பல மாறுதல்கள் தோன்றி மறைவதைக் காணலாம். இதுவரையில் கூறப்பெற்றவை சாதாரண சராசரி மனிதர்களுக்குரிய இயல்பாகும்.