பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_279 அடிகளார்போன்ற அருளாளர்கள் நிலைமை முற்றிலும் வேறுபட்டதாகும். விருப்பு - வெறுப்பு, வேண்டுதல்-வேண்டாமை, ஆசா-பாசம் ஆகியவற்றைக் கடந்தவர்கள் இப்பெருமக்கள். அச்சோப் பதிகத்தில் வரும் ஒன்பது பாடல்களையும் இந்த அடிப்படையை மனத்துட்கொண்டுபார்த்தால், ஒவ்வொரு பாடலையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கமுடியும் என்பதைக் காணலாம். ஒவ்வொரு பாடலிலும் முதற்பகுதி திருவாதவூரர் வாழ்க்கையைப் படம்போலச் சித்தரிக்கின்றது. பிற்பகுதி குருநாதர் அருள்பெற்ற மணிவாசகர் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றைச் சித்தரிக்கின்றது. இந்த முறையில் முன்னரும் சில பாடல்கள் உண்டேனும் அச்சோப் பதிகப் பாடல்கள் அவற்றினும் வேறுபட்டுத் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. முதலிரண்டு அடிகளில் கூறப்பெறும் திருவாதவூரர் வாழ்க்கையையும் பின்னிரண்டு அடிகளில் கூறப்பெறும் மணிவாசகரின் வாழ்க்கையையும் காண்பவர் யார்? இந்த இரண்டுக்கும் வடிவு கொடுக்கும் பாடல்களைப் பாடியவர் யார்? மிகக் கவனமாகக் சிந்திக்கவேண்டிய இடமாகும் இது. மணிவாசகரே இவை இரண்டையும் கண்டு, இரண்டுக்கும் வடிவு கொடுக்கும் முறையில் பாடினார் என்றுதான் நம்மில் பலரும் கூறுவர். ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த முடிவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இப்பதிகத்தைத் தவிர முன்னுள்ள பாடல்கள் இறையனுபவத்திலிருந்து இறங்கிவந்த அடிகளார் அந்த அனுபவத்தைப் பின்னோக்குப் பார்வையில் கண்டு பாடியவையாகும்.