பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282-திருவாசகம் சில சிந்தனைகள்-5 மணிவாசகர் வாழ்க்கை, என்ற இரண்டையும் அடுத்தடுத்துக் காண்கிறது. அடிகளார் கண்ட காட்சிக்கு ஒரு வடிவு கொடுக்க முற்படுகிறது அந்த ஆன்மா துரதிருஷ்ட வசமாக இந்த வடிவைச் சொற்களால் வடிக்கும் ஆற்றல் அந்த ஆன்மாவிற்கு இல்லை. எனவே, அந்த ஆன்மா தான் கண்ட காட்சிக்கு வடிவு கொடுக்க மணிவாசகரையே துணைக்கு அழைக்கிறது. அச்சோப்பதிகத்தின் பாடல்கள் அனைத்தும், அடிகளாரின் அந்தராத்மாவின் ஏவலின்படி அடிகளார் பாடியவையாகும். அடிகளாரின் உதவியை நாடியதால், இது அந்தராத்மாவின் ஏவல் என்பதை வெளிப்படையாகக் கூறாமல், அடிகளார் தாமே பாடியதுபோல் தன்மை ஒருமையைப் பயன்படுத்திப் பாடியுள்ளார். இந்த அந்தராத்மா, திருவாதவூரர் வாழ்க்கையையும், மணிவாசகரின் வாழ்க்கையையும், திரும்பிப் பார்க்குமாறு கட்டளையிட்டது. அதன்படியே, அடிகளார் திரும்பிப்பார்த்து, வாதவூரர் வாழ்க்கையையும் மணிவாசகரின் வாழ்க்கையை யும் அணித்தணித்தே வைத்துப் பேசுகின்றார். திரு அஞ்சைக் களத்தில் வெள்ளை யானை வந்து அழைக்க, அதில் ஏறிச்சென்றவர் யார்? இந்த உடம்போடு கயிலை சென்றார் என்று அவரைக் கூறுபவர்களும் உண்டு. ஆனால், சுந்தரரே இதற்கு விடை கூறியுள்ளார். முதற்பாடலிலேயே 'ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே (திருமுறை: 7-100-1) என்று கூறியமையால், சுந்தரர் என்று பேர்தாங்கிய உடல் வேறுபடுத்தப்பட்டது என்பதை அவரே கூறுகிறார். அப்படியானால் பாடலைப் பாடியவர் யார்? நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையாகும் இது. இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் யானையின்மேல் என் உடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே' என்று அவரே பாடுகிறார். இங்குக் கூறப்பெற்ற உடல் எது?