பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 291 பொருள்காணும் முறையில் எழுதப்பெற்றதாகும். இதனை எழுதி முடித்தபிறகு இருபது பாடல்களையும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் படிக்கச்சொல்லிக் கேட்டபோது முன்னர்க் கூறியதற்கு முற்றிலும் மாறுபட்ட சில சிந்தனைகள் தோன்றின. பின்னுரை என்ற தலைப்பில் இவைகளே இடம்பெற்றுள்ளன. இதேபோல, சிவபுராணத்தை எழுதிமுடித்து நான்கு அகவல்களும் முதல் பகுதியாக வெளிவந்துவிட்டது. அந்த நிலையில் சிவபுராணத்தின் கடைசிப் பத்து வரிகள் சில புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்தன. காழிப்பிள்ளையாரின் 'எனதுரை தனதுரை' என்ற தொடர் ஆழ்மனத்தில் இருந்தமையாற்போலும் சிவபுராணம் அடிகளாரின் திருவாயைக் கருவியாகக் கொண்டு தில்லைக் கூத்தனே பாடினான் என்ற சிந்தனை தோன்றவே, அதற்கேற்பக், கடைசிப் பத்து வரிகளுக்குப் புதிய பொருள் தோன்றிற்று. இவ்வெண்ணம் தோன்றுகின்ற நேரத்தில் 'திருவாசகம்-சில சிந்தனைகள் முதற்பகுதி அச்சாகி விட்டபடியால், இரண்டாவது பகுதியின் முன்னுரையில் இதனை எழுதியுள்ளேன். இந்த அடிப்படையில் பார்த்தால் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதைக் காணலாம். முன்னுக்குப்பின் முரண்படுதலை இந்நூலின் பல இடங்களில் காணலாம். சிந்தனையில் தோன்றியவற்றை அப்படியே எழுதவேண்டும் என்ற முடிவுடன் இந்நூல் தொடங்கப் பெற்றமையின் முரண்பாடுகளைப்பற்றிக் கவலைப்படாமல் அப்படி அப்படியே எழுதியுள்ளேன். பிறர் எழுதி வெளிவந்த சில உரைகளைப் பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாகப் புலனாயிற்று. உரை கண்ட பெருமக்கள் தனிப்பட்ட பாடலுக்கு உரை எழுதும்பொழுது அதில் வரும் சொற்களுக்கும் தொடர்களுக்கும் அப்படி அப்படியே பொருள்கூறிச் சென்றனர். இவர்கள் தனி