பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292--திருவாசகம்-சில சிந்தனைகள்-5 மரங்களைக் கவனித்தார்களேயன்றி மரங்கள் நிறைந்த தோப்பைக் கவனிக்கவில்லை என்பது தெரிகிறது. தனி மரம் தோப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏனோ இவர்கள் கவனிக்கவில்லை. தனிப்பட்ட பாடல்களுக்கு இவர்கள் எழுதிய உரைகள் அந்தப் பதிகத்தோடு பல இடங்களில் பொருந்துமாறில்லை. இவ்வுரையாசிரியர்கள் மணிவாசகரின் தனித்தன்மையை மனத்தில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. மூவர் முதலிகள், ஆழ்வார்கள் ஆகிய அனைவரும் பக்தி வலையில் பட்டவர்கள் என்பதில் ஐயமேயில்லை. ஆனால், இறைப்பிரேமை (divine ecstasy) என்பதில் இப்பெருமக்கள் எவ்வளவு துTரம் மூழ்கினார்கள் என்பதைத் தெரியமுடியவில்லை. திருவாசகம் பெற்றுள்ள தனிச்சிறப்பு எதுவென்றால் இந்த இறைப்பிரேமையில் மூழ்கித் திளைத்த ஒரு பெருமகனார் அதிலிருந்து விடுபட்டு வந்து அந்த அனுபவத்தைத் திரும்பிப் பார்த்துப் பாடியதேயாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் ஏழு திருமுறைகளும் திருவாசகத்தினின்றும் பெருமளவு மாறுபட்டவை என்பது நன்கு விளங்கும். ஆழ்வார் பெருமக்கள் அருளிய நாலாயிரம் பாடல்களில் ஆண்டாள் நாச்சியார் பாடியவை தனித்து நிற்பதைக் காணலாம். ஆழ்வார் பெருமக்கள் எல்லையற்ற பக்தியில் ஆழங்கால்பட்டு நின்றவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இந்தப் பக்தி உணர்வு எத்தனை பேருக்கு இறைப்பிரேமையாக மாறிற்று என்று சொல்வதற்கில்லை. இதன் மறுதலையாக, ஆண்டாள் நாச்சியாரின் பாடல்கள் அவர் இறைப்பிரேமையில் பலமுறை அமிழ்ந்து வெளிவந்தவர் என்பதை அறிவிக்கின்றன. பெண்ணாகப் பிறந்துவிட்ட காரணத்தால் இந்த உணர்வில் ஆழங்கால் பெறுதல் அவருக்கு எளிதாக அமைந்துவிட்டது போலும்.