பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298_திருவாகம் சில சிந்தனைகள்-5 ஆதிசங்கர பகவத்பாதர் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்பது இன்றைய அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்ற ஒன்றாகும். அப்பெருமகனார் அத்துவைதக் கொள்கையை மக்களிடையே வெகுவாகப் பரப்பினார். பிரமம் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் மித்தை என்பது சங்கரர் கொள்கையின் அடிப்படை ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அடிகளார் காலத்தில் மாயாவாதம் வெகுவாகப் பரவத் தொடங்கிற்று என்று கொள்வதில் தவறில்லை. அதனையே அடிகளார் மிண்டிய மாயாவாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்து அடித்தது (4:54-55) என்று கூறுகிறார். மாயாவாதத்தைச் சண்டமாருதம் என்று குறிப்பிட வேண்டுமானால், அது சங்கரரைப் பற்றியதே என்பதில் ஐயமில்லை. இத்தகைய காரணங்களால் அடிகளார் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியவர் என்று கொள்வதே சிறப்புடையதாகும். நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்ற பெருமக்கள் பரப்பிய பக்தி இயக்கம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மெள்ள மெள்ளச் சக்தி குறையலாயிற்று. பல்லவர்களுடைய ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கிய காலமாகும் இது. மகேந்திரவர்மன் காலத்தில் தொண்டை மண்டலத்திலும் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தெற்குப் பகுதியில் பாண்டிய நாட்டிலும் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த சமண சமயம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செல்வாக்கு இழந்துவிட்டது. என்றாலும், பிற சமயங்கள் ஆங்காங்கே சிறுசிறு துண்டுகளாக நிலைபெற்று நின்று சைவ சமயத்திற்கு ஊறு விளைவிப்பன ஆயின. இது புறச்சமயங்கள் ஆகிய சமணம், பெளத்தம் என்பவற்றால் தோற்றுவிக்கப்பட்ட நிலை. இவற்றை அல்லாமல் அறுவகைச் சமயங்களுள் ஒன்றாகிய